×
 

திடீர் மழையைத் துல்லியமா சொல்லும் புது டெக்னாலஜி! தானியங்கி நிலையங்களால் இனி சென்னைக்கு ஆபத்தில்லை!

சென்னை, டெல்லி, மும்பை மற்றும் புனேவில் இந்த ஆண்டில் தலா 50 தானியங்கி வானிலை நிலையங்கள் நிறுவப்படும் என மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

சென்னை உள்ளிட்ட நாட்டின் நான்கு முக்கிய பெருநகரங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் தலா 50 தானியங்கி வானிலை நிலையங்கள் (AWS) நிறுவப்பட்டு, நகர்ப்புற வானிலை கண்காணிப்பு உள்கட்டமைப்பு பலப்படுத்தப்படும் என மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) 151-வது நிறுவன தின நிகழ்ச்சி நேற்று (ஜனவரி 15) புதுடெல்லியில் சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப இந்திய வானிலை ஆய்வுத் துறை தன்னை நவீனப்படுத்தி வருவதைப் பாராட்டியதோடு, சென்னை மக்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார். குறிப்பாக, பெருமழை மற்றும் பேரிடர் காலங்களில் சென்னை சந்திக்கும் சவால்களைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டம் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது.

151-வது நிறுவன தின விழாவில் பேசிய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், 2026-ஆம் ஆண்டில் தில்லி, மும்பை, சென்னை மற்றும் புனே ஆகிய நான்கு நகரங்களில் தலா 50 தானியங்கி வானிலை நிலையங்கள் என மொத்தம் 200 நிலையங்கள் அமைக்கப்படும்; இது பேரிடர் அபாயத்தைக் குறைக்க மிக முக்கியமான நடவடிக்கையாக இருக்கும் எனத் தெரிவித்தார். இந்தத் தானியங்கி நிலையங்கள் மூலம் பெறப்படும் உயர் தெளிவுத்திறன் கொண்ட தரவுகள், சென்னையில் அடிக்கடி ஏற்படும் திடீர் மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் தீவிர வெப்ப அலைகளை மிகத் துல்லியமாகக் கணிக்க உதவும்.

இதையும் படிங்க: தலைநகரில் தமிழ் மணம்.. டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் பொங்கல் கொண்டாட்டம்.. கரகாட்டத்துடன் களைகட்டிய விழா!

வானிலை ஆய்வுத் துறையின் வளர்ச்சி குறித்துப் பேசிய அவர், கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பாரத் மண்டபத்தில் 150-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.  பிரதமர் அளித்த ஊக்கம் வானிலை ஆய்வுத் துறையின் மன உறுதியை அதிகரித்துள்ளது எனக் குறிப்பிட்டார். இந்தத் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வெறும் முன்னறிவிப்போடு நின்றுவிடாமல் விவசாயம், விமானப் போக்குவரத்து மற்றும் நகர்ப்புறத் திட்டமிடல் போன்ற துறைகளில் சிறந்த முடிவுகளை எடுக்க உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் எம். ரவிச்சந்திரன் மற்றும் ஐஎம்டி தலைமை இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா உள்ளிட்ட விஞ்ஞானிகள் கலந்துகொண்டனர்.


 

இதையும் படிங்க: விஜய் நடிகரா இருந்தா டெல்லிக்கு அழைத்திருப்போம்! பராசக்தி படக்குழு விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share