×
 

மத்தியஸ்தம் செய்ய தயார்.. 1000 ஆண்டுகால காஷ்மீர் பிரச்னை.. எல்லை விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் ட்ரம்ப்..!

காஷ்மீர் பிரச்சினையில் வெளிநாடுகள் தலையிடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று இந்தியா கூறி வரும் நிலையில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாக்., பயங்கரவாதிகள் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியாகினர். பயங்கரவாதிகளுக்கு பதில் அடி தரும் வகையில், இம்மாதம் 6ம் தேதி நள்ளிரவு, ஆபரேஷன் சிந்துார் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு - காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை இந்திய படைகள் தாக்கி அழித்தன.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பதிலடி கொடுத்ததில் இருந்து பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தி வந்தது. எல்லை மாநிலங்களை நோக்கி வந்த ட்ரோன், ஏவுகணைகளை நம் ராணுவம் சுட்டு வீழ்த்தி பதிலடி கொடுத்த நிலையில் போர் பதற்றம் அதிகரித்தது.

இந்த சமயத்தில் தான் நேற்று மாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இந்தியாவும் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்த சம்மதம் தெரிவித்ததாக கூறினார். அவரது அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் இருதரப்பு சண்டை நிறுத்தத்தை இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரியும் உறுதி செய்தார்.மாலை 5 மணியில் இருந்து தாக்குதல் நிறுத்தம் அமலானது. எல்லாம் சுமுகமாக முடிந்தது என்று மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், ஒப்பந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே பாகிஸ்தான் மீண்டும் அடாவடியில் இறங்கியது.

இதையும் படிங்க: எல்லையில் இரவில் சண்டை நிறுத்தம்.. இயல்புக்கு திரும்பும் எல்லையோர மாநிலங்கள்..மக்கள் நிம்மதி பெருமூச்சு!

ஸ்ரீநகர், ஆக்னூர், பிர்பாஞ்சால் ஆகிய பகுதிகளில் இரவு 9 மணிக்கு மேல் டிரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. இதை காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவும் உறுதி செய்தார். இதையடுத்து இந்திய ராணுவத்தினரும் திருப்பி அடித்தனர். அதன்பிறகு தாக்குதல் நிறுத்தப்பட்டதாக இரவு 10.30 மணிக்கு மேல் இந்திய ராணுவம் அறிவித்தது. சண்டை நிறுத்தத்தால் எல்லை பகுதியான ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பி வருகிறது.

இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்தது பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். பலரின் மரணத்திற்கும், அழிவுக்கும் வழிவகுக்கும் தாக்குதலை நிறுத்த வேண்டிய நேரம் என்பதை புரிந்துகொள்ளும் வலிமை, ஞானம், மன உறுதியை பெற்ற இந்தியா, பாகிஸ்தானின் சக்தி வாய்ந்த தலைமையை பார்த்து பெருமைபடுகிறேன்.

இரு தரப்பின் துணிச்சலான முடிவால் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் மரணம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுக்க அமெரிக்கா உங்களுக்கு உதவ முடிந்ததில் நான் பெருமைப்படுகிறேன். விவாதிக்கப்படாவிட்டாலும் இந்தியா, பாகிஸ்தானுடன் வர்த்தகத்தை கணிசமாக அதிகரிக்கப் போகிறேன். அதுமட்டுமின்றி ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீர் தொடர்பாக ஒரு தீர்வை எட்ட முடியுமா என்பதை பார்க்க இரு நாடுகளுடனும் இணைந்து பணியாற்றுவேன். இந்தியா பாகிஸ்தான் தலைவர்களை கடவுள் ஆசீர்வதிப்பார் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். காஷ்மீர் பிரச்சினையில் வெளிநாடுகள் தலையிடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று இந்தியா கூறி வரும் நிலையில், டிரம்பின் இத்தகைய பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 

இதையும் படிங்க: ஸ்ரீநகரில் குண்டுச் சத்தம் கேட்கிறது.. இதுவா போர் நிறுத்தம்.? காஷ்மீர் முதல்வர் ஆவேசம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share