×
 

டிரம்ப் கொள்கையால் அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களுக்கு புதிய சிக்கல்! 62% விசா சரிவு!

2025ம் ஆண்டில் அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விசாவில் 62 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் உயர்கல்வி படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கப்படுவது கடந்த ஆண்டை விட 2025-ம் ஆண்டில் கடுமையாக குறைந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

2024-ம் ஆண்டில் 58,694 இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க மாணவர் விசா வழங்கப்பட்ட நிலையில், 2025-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 22,149 ஆக குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரே ஆண்டில் சுமார் 62 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் தொடர்பான விசா நடைமுறைகளில் கடுமை அதிகரித்திருப்பது இந்த சரிவுக்கு முக்கிய காரணங்களாக இருக்கலாம் என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் கல்வி முடித்த பின்னர் வெளிநாட்டினர் வேலை செய்வது தொடர்பான கட்டுப்பாடுகள் அதிகரித்திருப்பதும் மாணவர்களின் அமெரிக்க கல்வி தேர்வில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அமெரிக்காவில் படித்த பிறகு வேலை வேண்டுமா? ரூ.96 லட்சம் கட்டணம் விதிக்க டிரம்ப் திட்டம்... இந்திய மாணவர்களுக்கு அதிர்ச்சி!

இதுதொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த Center for Immigration Studies (CIS) நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாணவர் விசா எண்ணிக்கை கடந்த ஓராண்டில் கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025-ம் ஆண்டில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு, அமெரிக்க உயர்கல்வியை நாடும் இந்திய மாணவர்களின் எதிர்கால திட்டங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என பார்க்கப்படுகிறது.

இந்தியாவைப் போலவே சீன மாணவர்களுக்கும் அமெரிக்க மாணவர் விசா வழங்குவதில் சரிவு ஏற்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டில் 61,075 சீன மாணவர்களுக்கு அமெரிக்கா விசா வழங்கியிருந்தது. ஆனால், 2025-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 40,034 ஆக குறைந்துள்ளது. இதன் மூலம் சீன மாணவர்களுக்கான விசா எண்ணிக்கையிலும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு மாணவர்களின் அமெரிக்க வருகை தொடர்பான மற்றொரு தரவும் கவனம் பெற்றுள்ளது. சர்வதேச கல்வி நிறுவனம் நடத்திய வருடாந்திர கணக்கெடுப்பின்படி, 2024-25 கல்வியாண்டில் அமெரிக்காவில் உயர்கல்வி படித்த வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையிலும் சரிவு பதிவாகியுள்ளது.

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை எதிர்பார்த்து இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அமெரிக்கா செல்கின்றனர். குறிப்பாக பொறியியல், கணினி அறிவியல், மேலாண்மை உள்ளிட்ட படிப்புகளுக்கு இந்திய மாணவர்களிடையே அதிக வரவேற்பு உள்ளது.

இந்நிலையில், விசா நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கையில் காணப்படும் கடுமை காரணமாக, அமெரிக்காவை உயர்கல்விக்கான இலக்காக தேர்வு செய்யும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் மேலும் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விசா வழங்கும் எண்ணிக்கை குறைந்துள்ளதால், அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ள இந்திய மாணவர்கள் மாற்று நாடுகளை பரிசீலிக்கும் சூழலும் உருவாகலாம். கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட இடங்களில் உயர்கல்விக்கான வாய்ப்புகளை இந்திய மாணவர்கள் அதிகம் நாடும் நிலை உருவாகுமா என்பதும் அடுத்தகட்டத்தில் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

இதையும் படிங்க: அமெரிக்காவில் படித்த பிறகு வேலை வேண்டுமா? ரூ.96 லட்சம் கட்டணம் விதிக்க டிரம்ப் திட்டம்... இந்திய மாணவர்களுக்கு அதிர்ச்சி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share