வந்தே மாதரம் பாடலுக்கும் எழுந்து நிற்கும் விதி..! உள்துறை அமைச்சகம் பரிசீலிப்பதாக தகவல்..!
வந்தே மாதரம் பாடலுக்கும் எழுந்து நிற்கும் விதி அமல்படுத்துவது குறித்து உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
தேசிய கீதம் பாடப்படும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்பது சட்டரீதியாக கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நேஷனல் ஆனர் ஆக்ட் (Prevention of Insults to National Honour Act, 1971) மூலம் தேசிய கீதத்திற்கு இழிவு செய்வது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. இதன்படி, தேசிய கீதம் ஒலிக்கும்போது உட்கார்ந்திருப்பது அல்லது மரியாதை காட்டாமல் இருப்பது சட்ட விரோதமாகும்.
ஆனால், வந்தே மாதரம் பாடலுக்கு இதுபோன்ற எந்த சட்டரீதியான அல்லது அதிகாரப்பூர்வ விதிமுறையும் இதுவரை இல்லை. பள்ளிகள், அரசு நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் போன்ற சில இடங்களில் பழக்கவழக்கமாக எழுந்து நிற்கும் மரபு இருந்தாலும், அது கட்டாயமல்ல; மீறினால் தண்டனை இல்லை. இந்நிலையில், 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, நாடு முழுவதும் ஓராண்டு கால கொண்டாட்டங்கள் தொடங்கப்பட்டன.
பிரதமர் நரேந்திர மோடி இதனைத் தொடங்கி வைத்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்யசபாவில் சிறப்பு விவாதத்தை நடத்தினார். இந்தக் கொண்டாட்டத்தின் போது வந்தே மாதரத்தின் வரலாற்று முக்கியத்துவம், சுதந்திரப் போராட்டத்தில் அதன் பங்கு, தேசபக்தியைத் தூண்டும் சக்தி ஆகியவை வலியுறுத்தப்பட்டன. இதனுடன் இணைந்து, தேசிய கீதத்திற்கு இணையான மரியாதையை வந்தே மாதரத்திற்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றன.
இதையும் படிங்க: உயரிய கௌரவம்..! தமிழக காவல்துறையினருக்கு ஜனாதிபதி விருது அறிவிப்பு..!
இதன் தொடர்ச்சியாக, 2026 ஜனவரி மாதத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றதாகவும், வந்தே மாதரம் பாடப்படும்போது எழுந்து நிற்பது கட்டாயமாக்குவது, பாடலைப் பாடுவதற்கான நெறிமுறைகள், அதற்கு இழிவு செய்தால் தண்டனை விதிப்பது போன்ற விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை இந்த பரிசீலனை இறுதியானால் தேசிய கீதம் போலவே வந்தே மாதரம் பாடலுக்கும் எழுந்து நின்று மரியாதை கொடுக்கும் விதி அமலுக்கு வரும்.
இதையும் படிங்க: டெலிவரி பாய்ஸ் நோட் பண்ணுங்க..!! முக்கிய விதிகளை வெளியிட்டது மத்திய அரசு..!!