வந்தே மாதரம் பாடலை இழிவுபடுத்தினால் 3 ஆண்டுகள் சிறை! தேசியக் கொடிக்கு இணையான அந்தஸ்து! இன்று முக்கிய மசோதா!
வந்தே மாதரம் பாடலை சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்ட தேசிய சின்னங்களின் பட்டியலில் சேர்க்கும் வகையில்புதிய சட்ட நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், இந்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜ்யசபாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய ‘வந்தே மாதரம்’ பாடல், 1950 ஜனவரி 24 அன்று அரசியலமைப்பு நிர்ணய சபையால் இந்தியாவின் தேசிய பாடலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தப் பாடல் உருவாகி 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, கடந்த ஜனவரி மாதம் முதல் அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் முழுமையாகப் பாட வேண்டும் என்றும், நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும் நிறைவிலும் தேசிய பாடல் மற்றும் தேசிய கீதம் இடம்பெற வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.
தற்போது கொண்டு வரப்பட உள்ள சட்டத் திருத்தத்தின் முக்கிய நோக்கம், தேசியக் கொடி மற்றும் தேசிய கீதம் போன்ற சட்டப்பூர்வ பாதுகாப்பு பெற்ற தேசிய சின்னங்களின் வரிசையில் ‘வந்தே மாதரம்’ பாடலையும் சேர்ப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மம்தா விவகாரத்தில் எதிர்ப்பு! திமுக வெளிநடப்பால் சூடுபிடித்த அனைத்துக் கட்சி கூட்டம்... பின்னணி என்ன?
இதன் மூலம் தேசிய பாடலுக்கு அவமரியாதை செய்வது அல்லது அதன் பாடலைத் தடுக்க முயல்வது போன்ற செயல்களுக்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும்.
மேலும், மசோதாவின் விவரங்களின்படி, வந்தே மாதரம் பாடலை வேண்டுமென்றே அவமதிப்பது, பாடலைத் தடுக்க முயற்சிப்பது, முழுமையாகப் பாட மறுப்பது அல்லது பாடலின் சில பகுதிகளை மட்டும் பாடி மீதமுள்ள வரிகளைத் தவிர்ப்பது போன்ற செயல்கள் குற்றமாகக் கருதப்படும் வகையில் விதிகள் இடம்பெறலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் வகையில் சட்டம் மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த மசோதா தற்போது தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் உள்ளது. அது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற பிறகே சட்டமாக அமலுக்கு வரும். எனவே, தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் முன்மொழியப்பட்ட திருத்தங்களின் அடிப்படையிலானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை? மத்திய அரசு கொண்டுவரும் புதிய மசோதா!