பெங்களுருவில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் தீவைப்பு.. மர்ம கும்பலை தீவிரமாக தேடும் போலீஸ்..!!
பெங்களுருவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஹலசூரு பகுதியில் மர்ம நபர்கள் தீவைத்துவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஹலசூரு, தமிழர்கள் கணிசமாக வசிக்கும் முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும். இந்தப் பகுதி, வரலாற்று முக்கியத்துவமும் பண்பாட்டு செழுமையும் கொண்டது. பத்தாம் நூற்றாண்டில் சோழர் ஆட்சியின் கீழ் இருந்த இப்பகுதியில், தமிழர்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். பிரிட்டிஷ் ஆட்சியில் கண்டோன்மென்ட் பகுதியாக உருவாக்கப்பட்ட ஹலசூரு, தமிழர்களின் குடியிருப்பு மையமாக மாறியது.
இன்று, இங்கு தமிழ் மொழி பேசும் மக்கள் செறிந்து வாழ்கின்றனர், குறிப்பாக சிவாஜி நகர், பென்சன் டவுன் போன்ற அருகிலுள்ள பகுதிகளுடன் இணைந்து ஹலசூரு ஏரி, இப்பகுதியின் அடையாளமாக விளங்குகிறது. இது பெங்களூரின் பழமையான நீர்நிலைகளில் ஒன்றாகும். இங்கு அமைந்துள்ள சோமேஸ்வர சுவாமி கோயில், சோழர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது, இதில் தமிழ் கல்வெட்டுகள் இன்றும் காணப்படுகின்றன. இது தமிழர்களின் பண்பாட்டு மற்றும் மத ரீதியான முக்கியத்துவத்தை பறைசாற்றுகிறது.
இதையும் படிங்க: பெங்களூரில் இனி புதன்கிழமைகளில் WFH-ஆ..? குஷியில் ஐடி ஊழியர்கள்..!!
வணிக ரீதியாகவும் ஹலசூரு செழிப்புடன் உள்ளது. இங்கு ஐ.டி. நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை உள்ளன. மேலும், பெங்களூரு மெட்ரோ மற்றும் பி.எம்.டி.சி. பேருந்து வசதிகள் இப்பகுதியை நன்கு இணைக்கின்றன. தமிழர்கள் இங்கு கல்வி, தொழில், கலை உள்ளிட்ட துறைகளில் பங்களிப்பு செய்கின்றனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 3.30 மணிக்கு ஹலசூரு மார்க்கெட் பகுதிக்குள் நுழைந்த 3 பேர் கொண்ட கும்பல் கடைகள், வாகனங்களுக்கு தீவைத்துவிட்டு ஓடியுள்ளது. ஹலசூர் மார்க்கெட்டில் உள்ள காளியம்மா கோவில் அருகே உள்ள 2 கடைகளுக்கு மர்மநபர்கள் தீவைத்துள்ளனர். இந்த தீ வேகமாக பரவி, அருகே நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள், சைக்கிள்களுக்கும் பரவியது.
அதிகாலை நேரம் என்பதால் மக்கள் தூங்கி கொண்டிருந்தனர். கடைகள், வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததை அறிந்தவர்கள் தூக்கத்தில் இருந்து எழுந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் அழகேஷ் என்பவரின் காய்கறி கடை உள்பட 2 கடைகள் சேதமடைந்துள்ளது. மேலும் 10 இருசக்கர வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து நாசமாகின. இதனால் அந்த பகுதி மக்கள் கவலையடைந்தனர்.
முதற்கட்ட விசாரணையில், இது தீவைப்பு சம்பவமாக இருக்கலாம் என காவல் துறை சந்தேகிக்கிறது. கடையின் உரிமையாளருக்கும், அப்பகுதியில் உள்ள மற்றொரு வணிகருக்கும் இடையே நடந்த வணிக பிரச்சனையே இதற்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றாலும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சந்தேக நபர்களை காவல் துறை தேடி வருகிறது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும், கடையில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன, மதிப்பு சுமார் 20 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக உள்ளூர் மக்கள் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்துள்ளனர். காவல் துறையினர் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து, மேலதிக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: பெங்களூரில் இனி புதன்கிழமைகளில் WFH-ஆ..? குஷியில் ஐடி ஊழியர்கள்..!!