×
 

சோகத்தில் முடிந்த இன்ப சுற்றுலா... தமிழகம் வந்தது வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள்...!

உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் இன்று தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

வியட்நாமின் பூ குவோக் தீவு அருகே சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில், 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் இன்று தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. சென்னை மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையங்களுக்கு உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் ரேவதி வழங்குகிறார்.

கடந்த 11-ஆம் தேதி, வியட்நாட்டின் பூ குவோக் தீவு அருகே, 32 இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் 4 பணியாளர்களுடன் சென்ற சுற்றுலா படகு, கடலில் ஏற்பட்ட மோசமான வானிலை மற்றும் பலத்த காற்றின் காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் மொத்தம் 15 இந்தியர்கள் உயிரிழந்தனர். அவர்களில் 10 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மீட்புக் குழுவினர் மேற்கொண்ட மீட்புப் பணியின் மூலம் மற்ற பயணிகள் மீட்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், உயிர் தப்பிய 14 பேர் ஏற்கனவே இந்தியா திரும்பியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஈரான் செய்த அதிர்ச்சி செயல்... இந்திய மாலுமிக்கு நேர்ந்த பயங்கரம்... பற்றி எரியும் ஹோர்முஸ் நீரிணை...!

இதனையடுத்து, உயிரிழந்த தமிழர்களின் உடல்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, 10 பேரின் உடல்கள் இன்று தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன. உயிரிழந்தவர்களில் திண்டுக்கல், திருச்சி, வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.

இதில், 6 பேரின் உடல்கள் கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கும், 4 பேரின் உடல்கள் சென்னை விமான நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்போது, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரின் உடலும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரவிசங்கரின் உடலும் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன. மேலும், அடுத்த விமானத்தில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருவரின் உடல்களும் சென்னை கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் அயலக நலத்துறை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வேலூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் வினோத் கண்ணனும் விமான நிலையத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தியதுடன், உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்விலும் பங்கேற்றார்.

அதனைத் தொடர்ந்து, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர், உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள அவர்களது சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

அதேபோல், கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு தர்மபுரியைச் சேர்ந்த செந்தில்குமார், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முருகப்பிரபு, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி, ஷேக் அப்துல்லா, அழகுராஜன் மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் ஆகியோரின் உடல்கள் கொண்டு வரப்படுகின்றன.

அங்கிருந்து, அவர்களது உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. மேலும், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாபு மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோரின் உடல்களும் அடுத்த விமானத்தில் சென்னை விமான நிலையத்தை வந்தடையும் என்றும், பின்னர் அவர்களது இல்லங்களுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியட்நாம் சுற்றுலா படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லும் பணிகள், அரசு அதிகாரிகளின் மேற்பார்வையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன

இதையும் படிங்க: #BREAKING கும்மிடிப்பூண்டியில் மீண்டும் அதிபயங்கரம்... உடல் சிதறி மரணம்... பலரின் நிலை என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share