#BREAKING முடிவுக்கு வந்தது பதற்றம்.. போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்தது இந்தியா!!
இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் செய்யப்பட்டதாக இந்தியா வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார்.
காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். குழந்தைகள் மற்றும் பெண்களைத் தவிர்த்துவிட்டு ஆண்களைக் குறிவைத்துத் தாக்கியுனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி, பாகிஸ்தானுடனனா சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது, பாகிஸ்தானியர்கள், இந்தியாவை விட்டு 48 மணிநேரத்தில் வெளியேற கெடு விதிக்கப்பட்டது, வாகா, அட்டாரி எல்லைகள் மூடப்பட்டன, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. மேலும் சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு நீர் திறந்துவிடப்படுவது நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி தருவது தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுக்க ராணுவத்திற்குப் பிரதமர் முழுச் சுதந்திரத்தை அளித்திருந்தார். இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது.
ஜெய்ஸ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகள் பயன்படுத்திய முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளன. மேலும், பாகிஸ்தான் நிலப்பரப்பில் உள்ள 4 முகாம்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 முகாம்கள் தாக்கப்பட்டன. பஹவல்பூர் (ஜெய்ஸ்-இ-முகமது தலைமையகம்), முரிட்கே (லஷ்கர்-இ-தொய்பா பயிற்சி முகாம்), கோட்லி (தற்கொலை தாக்குதல் பயிற்சி முகாம்), முசாபராபாத் (இறக்குமதி முகாம்), பர்னாலா (லஷ்கர் ஆதரவு முகாம்), சியால்கோட் (ஹிஸ்புல் முஜாஹிதீன் பயிற்சி முகாம்) ஆகியவை இந்த தாக்குதலில் குறிவைக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.
இதையும் படிங்க: அதிகரிக்கும் இந்தியா - பாக். பதற்றம்; ஐடி ஊழியர்களுக்கு WFH... ஐடி நிறுவனங்கள் அட்வைஸ்!!
இதை அடுத்து இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஜம்முவை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்தியா மீது மீண்டும் கடந்த 8 ஆம் தேதி இரவு பாகிஸ்தான் தாக்குதலை மேற்கொண்டது. வெள்ளிக்கிழமை அதிகாலை வரை கடும் மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தானின் 8 ஏவுகணைகள் தடுக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமான தளத்தில் தாக்குதல் நடத்த முயன்ற நிலையில், இந்திய விமானப் படை பதிலடியை கொடுத்துள்ளது.
இந்தியா மீதான பாகிஸ்தானின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது. இந்திய எல்லை பகுதியில் வசிக்கும் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவது, வழிபட்டு தலங்கள், பள்ளி, கல்லூரிகள், குடியிருப்புகள் என பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வந்தது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் தீவிரமடைந்தது. இதனிடையே இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்பக்கொண்டன என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், அமெரிக்காவின் மத்தியஸ்தம் செய்ய இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இரு நாடுகளுக்கும் வாழ்த்துக்கள். இந்த விஷயத்தில் அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்திருந்தார்.
அடுத்த சில நிமிடங்களிலேயே பாகிஸ்தான் தரபிலும் இரு நாடுகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தம் செய்வதாக முடிவெடுத்துவிட்டோம் என்று தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் எப்போதும் அதன் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டில் சமரசம் செய்யாமல், அமைதி, பாதுகாப்பிற்காக பாடுபட்டு வருகிறது என்றும் பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளதாகவும் அந்நாட்டு துணை பிரதமர் இஷாக் தார் தெரிவித்தார்.
தற்போது அதை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் செய்யப்பட்டதாக இந்தியா வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாலை 3.30 மணியளவில் இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் முடிவில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்ததாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாகவும் தெரிவித்தார். மேலும் வரும் 12 ஆம் தேதி பிற்பகல் மீண்டும் இரு நாடுகளுக்கிடையே பேச்சு வார்த்தை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியா எங்களை தாக்கவில்லை.. பாக். குற்றச்சாட்டை மறுத்த ஆப்கானிஸ்தான் அரசு!!