பாக்., இதயத்திலேயே தாக்கினோம்..! இந்தியா வைத்த செக்மேட்!! ராணுவ தளபதி பெருமிதம்!!
''ஆப்ரேஷன் சிந்துார் நடவடிக்கையில், இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழஙகப்பட்டது,'' என, ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி தெரிவித்தார்.
இந்திய ராணுவம் இப்போது தொழில்நுட்பத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், 'அக்னிஷோத்' என்ற பெயரில் ஒரு புதிய ஆராய்ச்சி பிரிவை தொடங்கியிருக்கு. இது சென்னை ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கு. கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி, ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி இதை தொடங்கி வைத்து, சில முக்கியமான விஷயங்களைப் பேசினார்.
ராணுவத்தில் மனித வளமும் தொழில்நுட்பமும் எப்படி ஒன்றிணைந்து சிறப்பாக வேலை செய்யலாம்னு அவர் விளக்கினார். தொழில்நுட்பம் மூலம் பல முடிவுகளை யோசிக்கலாம், ஆனால் இறுதி முடிவு எடுக்க வேண்டியது மனிதனின் மூளைதான் என்று அழுத்தமாகக் கூறினார். இது ராணுவத்தின் எதிர்கால திட்டங்களுக்கு ஒரு முக்கிய அடித்தளமாக இருக்கும் என்பது தெளிவு.
அவர் பேச்சில், பழைய சம்பவங்களை நினைவுபடுத்தினார். பஹல்காம் தாக்குதல் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அது நடந்த மறுநாளே, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. முப்படை தளபதிகளும் அதில் பங்கேற்றாங்க. கூட்டத்தில் அமைச்சர் 'பொறுத்தது போதும்' என்று சொல்லி, பஹல்காம் தாக்குதலுக்கு உடனடியாக பதிலடி கொடுக்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ஆபரேசன் சிந்தூரில் வீழ்த்தப்பட்ட விமானங்கள் எத்தனை? ரகசிய தகவல்களை அறிவித்தார் விமானப்படை தளபதி..
எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் முழு சுதந்திரம் வழங்கினார். இது ராணுவ தளபதிகளுக்கு முதல் முறையாக அரசியல் தெளிவு கிடைத்தது போல் இருந்தது. இதனால் களத்தில் அவர்களின் திறமையை முழுமையாக வெளிப்படுத்த முடிந்தது.
அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 25ம் தேதி அனைவரும் வடக்கு கட்டளைப் பகுதிக்கு நேரடியாகச் சென்று இலக்குகளைப் பார்வையிட்டாங்க. எப்படி பதில் தாக்குதல் நடத்தலாம் என்று விரிவான திட்டம் தயாரிச்சாங்க. பிறகு, 'ஆப்பரேஷன் சிந்தூர்' என்ற நடவடிக்கை மூலம் ஏழு இடங்களில் இருந்த ஒன்பது பயங்கரவாத முகாம்களைத் தாக்கி அழித்தாங்க.
அதில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டாங்க. இந்த 'சிந்தூர்' பெயர், நாட்டின் ஒற்றுமையை எப்படி குறிக்குது என்பது அழகாகத் தெரிந்தது. ஆப்பரேஷன் முடிந்த பிறகு, ஜெனரல் வீரர்களைச் சந்தித்து, 'நாட்டில் எந்த சகோதரி, அம்மா அல்லது மகளாவது குங்குமம் வைக்கும்போது, உங்கள் ஞாபகம் வரும்' என்று உணர்ச்சிகரமாகக் கூறினார்.
நாம் பாகிஸ்தானின் இதயப் பகுதிகள் போன்ற இடங்களில் தாக்குதல் நடத்தினோம். இதை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. எங்கள் தாக்குதலுக்கு அவர்கள் பதில் தாக்குதல் செய்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். அதற்காக ஜம்மு-காஷ்மீரில் ஐந்து இடங்களையும், பஞ்சாப்பில் நான்கு இடங்களையும் தேர்வு செய்து தயாராக இருந்தோம்.
இந்த ஆப்பரேஷன் ஒரு சதுரங்க ஆட்டம் போல இருந்தது. எதிரியின் அடுத்த நகர்வுகளை கணிக்க முடியாத சூழலில் நடவடிக்கை எடுத்தோம். தரைப்படை இதில் சிறப்பாகச் செயல்பட்டது. எவ்வளவு வீரர்கள் முன்னேற வேண்டும், எவ்வளவு பின்னால் நிற்க வேண்டும், எவ்வளவு பேர் வேறு பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்பதை சதுரங்கம் ஆடுவது போல திட்டமிட்டாங்க.
சில இடங்களில் எதிரிகளுக்கு 'செக்மேட்' வைத்தோம். சில இடங்களில் நம் வீரர்கள் உயிரிழக்கும் அபாயமும் இருந்தது. ஆனாலும், வெற்றியை நோக்கி தொடர்ந்து முன்னேறினோம். இது போர் இல்லை என்றாலும், அதற்குக் குறைவில்லாத ஒன்று என்று சொல்லலாம். வெற்றி என்பது மனதில் இருக்கிறது என்று ஜெனரல் வலியுறுத்தினார்.
அவர் பாகிஸ்தானியர்களை உதாரணமாகக் கூறினார். அவர்களிடம் சென்று 'நீங்கள் போரில் வென்றீர்களா அல்லது தோற்றீர்களா' என்று கேட்டால், 'எங்கள் ராணுவ தளபதி பீல்டு மார்ஷல் பதவி பெற்றார், அதனால் நாங்கள் வென்றிருப்போம்' என்று சொல்வார்கள் என்று சிரித்துக்கொண்டே கூறினார். இந்த ஆராய்ச்சி பிரிவு, ராணுவத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு புதிய பாதை திறக்கும் என்பது உறுதி. இதுபோன்ற முயற்சிகள் நாட்டின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும்.
இதையும் படிங்க: ட்ரம்புக்கு கொடுங்க அமைதிக்கான நோபல் பரிசு..! பாக்., இஸ்ரேல் உட்பட 5 நாடுகள் சிபாரிசு!!