இந்தியா - பாக்., போர் குறித்து ட்ரம்ப் சொன்னது உண்மையா? மோடியிடம் அமெரிக்கா பேசியது என்ன..?
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் நடந்த போது அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் பிரதமர் மோடியிடம் என்ன பேசினார் என்பது குறித்த தகவலை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வெளிப்படுத்தி உள்ளார்.
காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. ஜெய்ஷ் இ முகமது தலைவன் மசூத் அசார் குடும்பத்தினர் உட்பட 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதனால் இரு நாடுகளிடையே தீவிர போர் மூளுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த மே மாதம் 10ம் தேதி மாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இந்தியாவும் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்த சம்மதம் தெரிவித்ததாக கூறினார். அவரது அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் இருதரப்பு சண்டை நிறுத்தத்தை இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரியும் உறுதி செய்தார். அன்று மாலை 5 மணியில் இருந்து தாக்குதல் நிறுத்தம் அமலானது.
இதையும் படிங்க: பாக்., சீனா தலையில் பேரிடி.. ஜெய்சங்கரின் ராஜதந்திரம் மாஸ்.. குவாட் மாநாட்டில் சம்பவம் செய்த இந்தியா..!
இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தலையீடு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக சிறப்பு பார்லிமெண்ட் கூட்டி விவாதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கனடாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இந்தியா, பாகிஸ்தான் இடையே 3ம் நபர் தலையீட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்க தலையிடவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
எனினும் எதிர்க்கட்சிகள் இதுகுறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் நடந்த போது அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் பிரதமர் மோடியிடம் என்ன பேசினார் என்பது குறித்த தகவலை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வெளிப்படுத்தி உள்ளார்.
அமெரிக்காவின், 'நியூஸ்வீக்' பத்திரிகைக்கு, இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் துவங்க காரணமான காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல், போர் நிறுத்தம் ஆகியவை குறித்து பேட்டியளித்தார்.
அதில் அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: போர் நிறுத்தத்திற்கும், அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியா - பாகிஸ்தான் மோதல் குறித்து பிரதமர் மோடியிடம் மே 9ம் தேதி நள்ளிரவு தொலைபேசி வாயிலாக பேசும் போதும் நானும் பிரதமரின் அறையில் இருந்தேன்.
அப்போது வான்ஸ் 'ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையால் இந்தியாவின் மீது பாகிஸ்தான் மிகப் பெரிய தாக்குதலை நடத்துவர். சில விஷயங்களை எங்களால் ஏற்க முடியாது' என்றார்.
'பாகிஸ்தானின் அச்சுறுத்தலை பொருட்படுத்த மாட்டேன், தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி தருவோம்' என பிரதமர் கூறினார். வான்ஸ் பேசிய பின் மறுநாள் காலை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ என்னை அழைத்து, 'பாகிஸ்தான் தரப்பில் பேச்சு நடத்த தயாராக உள்ளனர்' என்றார். அன்று பிற்பகல் பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல், மேஜர் காஷிப் அப்துல்லா இந்தியாவுக்கான ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் கயாவை நேரடியாக அழைத்து போரை நிறுத்தும் படி கோரினார். அதன் படியே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் டிரம்ப்.. ரஷியாவுடன் வர்த்தகத்தை தொடர்ந்தால் இந்தியாவுக்கு இவ்ளோ வரியா..!!