Whatsapp-ல் வந்தாச்சு புதுப்புது அப்டேட்டுகள்..!! இனி இந்த பில் எல்லாம் ஈஸியா கட்டலாம்..!!
மத்திய அரசின் Bharat connect உதவியுடன் 30 பிரிவுகளின் 22,722-க்கும் மேற்பட்ட சேவை நிறுவனங்களின் பில்களை வாட்ஸ் அப்-ல் upi, credit, debit கார்டுகள் மூலம் செலுத்த முடியும்.
இந்தியாவில் வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஒரு முக்கிய வசதி அறிமுகமாகியுள்ளது. இனி மின்சார பில், சமையல் எரிவாயு (எல்பிஜி), நீர் வரி, ஃபாஸ்டாக், இன்சூரன்ஸ் பிரீமியம், கிரெடிட் கார்டு பில் மற்றும் கடன் தவணைகள் உள்ளிட்ட அன்றாட பில்களை வேறு செயலிக்கு மாறாமல் வாட்ஸ்அப்-லேயே செலுத்த முடியும்.
மத்திய அரசின் பாரத் கனெக்ட் (Bharat Connect / BBPS) வலையமைப்பின் உதவியுடன் இந்த வசதி செயல்படுகிறது. இதன் மூலம் 30 பிரிவுகளில் உள்ள 22,722-க்கும் மேற்பட்ட சேவை நிறுவனங்களின் பில்களை செலுத்தலாம். யூபிஐ, டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்த முடியும். இந்த அம்சம் படிப்படியாக இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
அடுத்த சில வாரங்களில் அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயன்படுத்தும் முறை எளிதானது. வாட்ஸ்அப் முகப்புத் திரையின் மேற்புறத்தில் உள்ள ₹ ஐகானைத் தட்டவும். பிறகு பில் வகையைத் தேர்ந்தெடுத்து, சேவை நிறுவனத்தைத் தேர்வு செய்யவும். கணக்கு எண் அல்லது வாடிக்கையாளர் விவரங்களை உள்ளிட்டு உறுதிப்படுத்தவும். பின்னர் பில் தொகையை சரிபார்த்து, விருப்பமான பணம் செலுத்தும் முறையைத் தேர்ந்தெடுத்து உறுதிப்படுத்தவும். முடிந்தது.
இதையும் படிங்க: மெலோனி–மோடி நட்பு மீண்டும் டிரெண்டிங்! இத்தாலி பிரதமருக்கு கிடைத்த ஸ்பெஷல் வாழ்த்து!
முன்னர் செலுத்திய பில்கள் மற்றும் வரவிருக்கும் பில்களை ஒரே இடத்தில் பார்க்கலாம். ஒரே நிறுவனத்தின் கீழ் வீடு, அலுவலகம், குடும்ப உறுப்பினர்கள் என பல கணக்குகளை நிர்வகிக்கவும் வசதி உள்ளது. அடிக்கடி பயன்படுத்தும் பிரிவுகள் தானாக முன் வைக்கப்படும். இந்த வசதி மூலம் பயனர்கள் பல செயலிகளுக்கு இடையே மாற வேண்டிய அவசியமில்லை. ஒரு செய்தி அனுப்புவது போல எளிதாக பில்களை செலுத்த முடியும் என மெட்டா இந்தியா தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் வாட்ஸ்அப்பின் பயனர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், டிஜிட்டல் பேமெண்ட்ஸ் இன்னும் எளிமையாகவும் பரவலாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய வசதி அன்றாட வாழ்க்கையை இன்னும் வசதியாக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை. பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் செயலியை புதுப்பித்து இந்த அம்சத்தை பயன்படுத்திப் பார்க்கலாம்.
இதையும் படிங்க: நேபாளத்தை புரட்டிப்போட்ட பெருவெள்ளம்: ரூ.24,250 கோடி இழப்பு! காத்திருக்கும் மிகப்பெரிய சவால்!