10 நாட்கள் கழித்தும் கரூரில் கால் வைக்க அஞ்சும் விஜய்... காரணம் இதுதானா?
கரூர் துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறாதது ஏற்கனவே சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், தற்போது வீடியோ காலில் பேசியிருப்பது கடும் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து தற்போதுவரை அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நடந்து 10 நாட்கள் ஆன நிலையில், தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை வீடியோ கால் மூலமாக சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
கரூர் மாவட்ட நிர்வாகிகள் சிலர் மூலமாக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 21 பேரின் குடும்பங்களை விஜய் தொடர்பு கொண்டதாகவும், அப்போது விரைவில் உங்களை நேரில் வந்து சந்திப்பேன் என உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து விஜய் கரூர் செல்வதற்கான பணிகள் வேக, வேகமாக நடந்து வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ள விஜய், தனது கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரண தொகையை தனது கைகளாலேயே வழங்க திட்டமிட்டுள்ளாராம்.
இதனிடையே, 10 நாட்கள் கழித்தும் விஜய் கரூர் பக்கம் கால் வைக்க தயங்குவது ஏன்? என்ற கேள்வி சோசியல் மீடியாவில் கடும் விமர்சனமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. தவெகவின் தலைவராக விஜய் இருந்தாலும், அவர் மக்களோடு மக்களாக கலந்து முழு அரசியல் தலைவராக முன்நிறுத்தவில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக வீட்டிலிருந்து கொண்டே அரசியல் செய்கிறார், வீட்டை விட்டு வெளியே வாங்க விஜய் என்றெல்லாம் திமுக உள்ளிட்ட கட்சியினர் அவரை விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தைரியம் இருந்தால் விஜய் இதை செஞ்சியிருக்கனும்... போட்டுத் தாக்கிய துரைமுருகன் ...!
மக்களோடு மட்டுமல்ல கட்சியின் நிர்வாகிகள் உடன் கூட விஜய்க்கு பெரிதாக தொடர்பில்லை எனக்கூறப்படுகிறது. இதற்கு காரணம் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த். முழுக்க முழுக்க நிர்வாகிகளை ஆனந்த் தான் கண்ட்ரோல் செய்து வந்துள்ளார். இதனால் விஜய்க்கு கரூர் சம்பவம் தொடர்பாக யாரை தொடர்பு கொள்ள வேண்டும், என்ன மாதிரியான ஏற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும் போன்ற எந்த வழியும் தெரியவில்லை எனக்கூறப்படுகிறது.
அதுமட்டுமல்ல சமீப காலமாகவே விஜய் பரப்புரைக்குச் செல்லும் போது எல்லாம் அவர் மீது பாட்டில் வீசு, விமான நிலையத்தில் இருந்து வரும் போது மண்டையில் தட்டுவது போன்ற சம்பவங்களில் சில விஷமிகள் ஈடுபட்டு வருகிறார்கள். கரூர் சம்பவத்தால் ஒட்டுமொத்த தமிழகமே கொதித்து போயுள்ள இந்த சமயத்தில் நேரில் செல்வதை விஜய் கொஞ்சம் ஆறப்போட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கரூர் மக்களின் மனநிலையில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்ட பிறகு நேரில் சென்று ஆறுதல் கூறலாம் என விஜய் நினைத்திருக்கலாம் என சில அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரின் துக்கம் கொஞ்சம் குறையட்டும், மனசு ஆறட்டும் என விஜய் வெயிட் செய்து கொண்டிருக்கிறார் எனக்கூறப்பட்டாலும், அதற்காக 10 நாட்களைக் கடந்தும் கரூர் பக்கம் கால் வைக்க மாட்டேன் என அஞ்சுவது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING கரூர் செல்கிறார் விஜய்... மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் பறந்த முக்கிய கடிதம்...!