×
 

குறைகிறதா வீட்டுக் கடன், வாகனக் கடன் வட்டி..?? நாளை முக்கிய முடிவெடுக்கப்போகும் ரிசர்வ் வங்கி..!!

வங்கிக்கடன் வட்டி விகிதம் 5.25 சதவீதமாக நீடிக்குமா என்பது குறித்து முக்கிய முடிவை ரிசர்வ் வங்கி நாளை அறிவிக்கிறது.

ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை குழு (எம்பிசி) தனது இரு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் கூட்டத்தில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை மறுபரிசீலனை செய்து முடிவு எடுக்கிறது. இந்த விகிதம் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதத்தில், சில்லறை பணவீக்க விகிதம் 2.74 சதவீதத்திலிருந்து 3.21 சதவீதமாக சற்று உயர்ந்தது. இருப்பினும், இது ரிசர்வ் வங்கியின் இலக்கான 4 சதவீதத்துக்குள் இருப்பதால், பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்கும் நோக்கில் மத்திய அரசு ரிசர்வ் வங்கியை தொடர்ந்து கண்காணிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

பணவீக்க அழுத்தம் குறைவாக இருப்பதால், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் டிசம்பர் வரை ரெப்போ விகிதத்தை மொத்தம் 1.25 சதவீதம் குறைத்தது. இதன் விளைவாக, தற்போது ரெப்போ விகிதம் 5.25 சதவீதத்தில் நிலையாக உள்ளது. இந்தக் குறைப்பு வங்கிக் கடன் வட்டி விகிதங்களை பாதித்து, பொதுமக்களின் கடன் சுமையை ஓரளவு குறைத்துள்ளது.

இதையும் படிங்க: புதிய சுவிட்சிங் சர்வீஸ்..!! அக்கவுண்ட் நம்பர் மாற்றாமல் வங்கியை மாற்றும் வசதி..!! RBI பரிசீலனை..!!

இந்நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் ஆறு உறுப்பினர்கள் கொண்ட நிதிக் கொள்கை குழு, மூன்று நாட்கள் நீடித்த கூட்டத்தை நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் வட்டி விகித மாற்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்று வருகிறது. கூட்டத்தின் முடிவில், நாளை (புதன்கிழமை) ரிசர்வ் வங்கி தனது முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.

இது, மேற்கு ஆசியப் பகுதியில் ஏற்பட்ட போர் தொடங்கிய பின்னர் நடைபெறும் முதல் நிதிக் கொள்கை கூட்டமாகும். போர் காரணமாக எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட காரணிகளால் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே, தற்போதைய 5.25 சதவீத ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் நீடிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் பெரும்பாலும் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த ஆண்டு முழுவதும் ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கைகளால், வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் தங்க நகை கடன்களுக்கான வட்டி விகிதங்கள் ஒரு சதவீதத்துக்கும் மேல் குறைந்தன. இது பல்வேறு துறைகளில் முதலீட்டை ஊக்குவித்துள்ளது. தற்போதைய கூட்டத்தில் மேலும் வட்டி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்த எதிர்பார்ப்பு சந்தையில் நிலவுகிறது.

ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு, வங்கிகளின் கடன் வழங்கும் விகிதங்கள், பொதுமக்களின் கடன் சுமை மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை நேரடியாக பாதிக்கும். பணவீக்கத்தை 4 சதவீதத்துக்குள் வைத்திருக்கும் அதே வேளையில், வளர்ச்சியை தூண்டும் சமநிலையை ரிசர்வ் வங்கி எப்படி பேணுகிறது என்பது முக்கியமானது.

இதையும் படிங்க: புதிய சுவிட்சிங் சர்வீஸ்..!! அக்கவுண்ட் நம்பர் மாற்றாமல் வங்கியை மாற்றும் வசதி..!! RBI பரிசீலனை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share