நான் தான் ஜெயலலிதாவோட பொண்ணு.. கிளம்பிய புது சர்ச்சை.. யார் அந்த மகள்..?
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் எனக்கூறி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்த பிறகு, பலரும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். பலரும், தாங்கள் தான் ஜெயலலிதாவின் மகள், மகன் என கூறி உரிமை கொண்டாடுகின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு புது சர்ச்சை கிளம்பியுள்ளது. கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் சுனிதா. 37 வயதான இவர், தான் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் மகள் என்று கூறி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்க்கு கடிதம் எழுதி, மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆரின் சொத்துகளில் தனக்கு உரிமையான பங்கு வழங்கப்பட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். மேலும், ஜெயலலிதாவை சசிகலா மற்றும் "மன்னார்குடி மாஃபியா" கொலை செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
முக்கியமாக, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா தான் பெற்றோர் என நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார். அதேசமயம், ஜெயலலிதாவின் சொத்துகள் நிர்வாகம் தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுகள் தனது உரிமையை மறுக்கும் விதமாக உள்ளதாகவும் சுனிதா கூறியுள்ளார். தனக்கு 18 வயதான பிறகு டி.என்.ஏ. சோதனை எடுக்கப்பட்டதாகவும் அதில் தாம் ஜெயலலிதாவின் மகள் என்பது உறுதியானதாகவும் கூறிய சுனிதா, கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டிற்கு சென்றதாகவும், அப்போது அவர் மயங்கிய நிலையில் இருந்ததாகவும் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நிமிஷா வழக்குல எதுவும் பண்ண முடியல!! கைவிரித்த மத்திய அரசு!! கலக்கத்தில் கேரளா நர்ஸ் குடும்பம்!
இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சுனிதா, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு பிரதமரை சந்திக்கவுள்ளதாக கூறினார். மேலும் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனக்கும் தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் சுனிதா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்க்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. இந்தக் கோரிக்கை சமூக ஊடகங்களில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது, ஆனால் இதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லாததால், இது சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. ஜெயலலிதாவுக்கு குழந்தைகள் இல்லை என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாக அறியப்பட்டாலும், இந்த மனு மீதான நீதிமன்ற முடிவு கவனத்தை ஈர்க்கிறது.
இதையும் படிங்க: கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு வந்த சர்ச்சை இமெயில்!! படித்ததும் ஆடிப்போன போலீசார்!! ஹை அலர்ட்..!