யூனுஸ் ஆட்சியை தூக்கி எறிய வேண்டும்..!! ஷேக் ஹசீனா ஆவேசப் பேச்சு..!!
வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்த ஷேக் ஹசீனா முதல் முறையாக பொதுநிகழ்ச்சியில் ஆடியோ வாயிலாக உரையாற்றியிருக்கிறார்.
வங்கதேசத்தில் அரசியல் கொந்தளிப்பு நீடிக்கும் நிலையில், அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, ஓராண்டுக்கும் மேலாக முதல் முறையாக பொது நிகழ்ச்சியில் ஆடியோ மூலம் உரையாற்றினார். டெல்லியில் நடைபெற்ற வெளிநாட்டு செய்தியாளர்கள் மன்ற நிகழ்ச்சியில், அவர் தற்போதைய இடைக்கால அரசுத் தலைவரான முகம்மது யூனுஸை கடுமையாக சாடினார்.
"வங்கதேசத்தில் ஜனநாயகத்தை காப்பாற்றுவோம்" என்ற தலைப்பிலான இந்நிகழ்ச்சியில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், வங்கதேச வம்சாவளியினர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். கடந்த 2004-ம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற போராட்டங்களின்போது வன்முறை வெடித்ததால், ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார். அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு வங்கதேச அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருப்பினும், இந்தியா இக்கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. தற்போது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சியில் உள்ளது. இந்த ஆட்சியின் கீழ் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: கொசுவலை போட்டது அவர் கொடுத்த ஐடியா! கவுன்சிலரை கையை காட்டிவிட்டு தப்பிக்கும் மேயர் பிரியா!
ஆடியோ உரையில் ஷேக் ஹசீனா கூறியதாவது: "முகம்மது யூனுஸ் சட்டவிரோதமாக ஆட்சி நடத்தி வருகிறார். அவர் நாட்டை பயங்கரவாதம், சட்ட ஒழுங்கின்மை, ஜனநாயக சீரழிவு ஆகியவற்றால் நிரப்பியுள்ளார். வங்கதேசத்தின் அரசியல் சாசன இறையாண்மை நெருக்கடியில் உள்ளது. வெளிநாட்டு சக்திகளின் கைப்பாவையாக செயல்படும் யூனுஸ் அரசை தூக்கி எறிய வேண்டும். ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும்." அவர் மேலும், யூனுஸை "கொலைகார ஃபாசிஸ்ட், அதிகார வெறி பிடித்தவர், பண மோசடிக்காரர்" என விமர்சித்தார்.
"வங்கதேசம் பயங்கரவாத யுகத்தில் மூழ்கியுள்ளது. மக்களின் வாழ்க்கைக்கும் சொத்துக்கும் பாதுகாப்பில்லை. யூனுஸ் நாட்டை காட்டிக்கொடுத்து பேரழிவு நோக்கி தள்ளுகிறார்" என்று ஆவேசமாக கூறினார். ஷேக் ஹசீனா தனது உரையில், "சட்டவிரோத யூனுஸ் நிர்வாகத்தை அகற்ற வேண்டும். ஜனநாயகத்தை மீண்டும் நிறுவி, நியாயமான தேர்தல் நடத்த சூழலை உருவாக்க வேண்டும். யூனுஸ் குழுவின் நிழல் இருக்கும் வரை தேர்தல் சாத்தியமில்லை. ஐக்கிய நாடுகள் சபை பாரபட்சமற்ற விசாரணை நடத்தி உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும். அதன் மூலமே நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியும்" என வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சி, வங்கதேச அரசியல் நிலவரத்தை உலக அரங்கில் மீண்டும் விவாதத்துக்கு கொண்டு வந்துள்ளது. யூனுஸ் ஆட்சியின் கீழ் அங்கு மனித உரிமை மீறல்கள் நடப்பதாக சர்வதேச அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. ஷேக் ஹசீனாவின் இந்த உரை, அவரது ஆதரவாளர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், வங்கதேச அரசு இதற்கு எவ்வாறு பதிலளிக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்தியாவின் நிலைப்பாடு, இரு நாடுகளுக்கிடையிலான உறவை பாதிக்கலாம் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே..! சென்னையில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்..! முக்கிய அறிவிப்பு.. !