உக்ரைன் - ரஷ்யா போரின் இறுதிக்கட்டம்! வரவிருக்கும் வாரங்கள் மிக முக்கியம்!! ஜெலன்ஸ்கி சூசகம்!
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க தூதர்கள் ஸ்டீவ் விட்காப் மற்றும் ஜாரெட் ஆகியோருடன் ஜெலன்ஸ்கி பேச்சு நடத்தினார்.
கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்க தூதர்களான ஸ்டீவ் விட்காப் மற்றும் ஜாரெட் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இது போர் நிறுத்தத்தை நோக்கிய முக்கியமான அடியாகப் பார்க்கப்படுகிறது.
2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரை நிறுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அவை தோல்வியிலேயே முடிந்தன. அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பிறகு, போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தினார். அமெரிக்கா தொடர்ந்து இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.
போர் நிறுத்தம் தொடர்பாக 20 அம்சங்களைக் கொண்ட திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த திட்டங்களில் பெரும்பாலானவற்றுக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஒப்புதல் அளித்துள்ளார். சில பிராந்திய பிரச்சினைகள் மட்டும் நிலுவையில் உள்ளன. அமெரிக்காவும் உக்ரைனும் இதை ஏற்றுக்கொண்ட நிலையில், அந்த ஒப்பந்தத்தை ரஷ்யாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால்?!! உக்ரைனுக்கு அதிபர் புடின் வார்னிங்!
இதன் அடுத்த கட்டமாக, அமெரிக்க தூதர்கள் ஸ்டீவ் விட்காப் மற்றும் ஜாரெட் ஆகியோருடன் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பேச்சு நடத்தினார். இது குறித்து ஜெலென்ஸ்கி கூறியதாவது: “அமெரிக்க தூதர்களுடன் ஆக்கபூர்வமான உரையாடல் நடந்தது. அவர்களிடம் உக்ரைன் - ரஷ்யா இடையே நிலையான அமைதிக்கான நல்ல யோசனைகள் உள்ளன.
இரு நாடுகளும் உணர்திறன் மிக்க பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். அதிபர் டிரம்பின் தூதர்களுடன் நடந்த விவாதம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். சில ஆவணங்கள் கிட்டத்தட்ட தயாராக உள்ளன, சில முழுமையாக தயாராகிவிட்டன. முக்கிய விஷயங்களில் இன்னும் சில பணிகள் செய்ய வேண்டியுள்ளன. ஆனால் அமெரிக்க குழுவுடன் இணைந்து எப்படி செயல்படுத்துவது என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். வரும் வாரங்கள் தீவிரமாக இருக்கும்” என்றார்.
இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால், நீண்டகாலமாக நடந்து வரும் உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைதி ஒப்பந்தத்தின் விவரங்கள் ரஷ்யாவின் பதிலுக்குப் பிறகு தெரியவரும்.
இதையும் படிங்க: நேட்டோவில் இணையப் போவதில்லை!! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி! முடிவுக்கு வருகிறதா போர்?!