தனியார் விடுதியில் தீ!! அலறித் துடித்த பெண்கள்!! உயிர் பயத்தில் 50 பெண்களின் திக் திக் நிமிடங்கள்!
கர்நாடகாவின் பெங்களூரில் தனியார் விடுதியில் தீப்பிடித்த போது, சுதாரித்துக் கொண்டதால், 50 பெண்கள் முதல் மாடியில் இருந்து குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பெங்களூரு: தீயின் கொடூரத்திலிருந்து உயிர் தப்ப தனியார் பெண்கள் விடுதியின் முதல் மாடியிலிருந்து குதித்து அதிர்ஷ்டவசமாக தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள நந்தினி லே-அவுட் பகுதியில், ராஜ்குமார் நினைவிடத்துக்கு அருகில் ஒரு பெண்களுக்கான பேயிங் கெஸ்ட் (பி.ஜி.) விடுதி இயங்கி வந்தது. இந்த நான்கு மாடி கட்டடத்தின் அருகில் எல்.இ.டி. திரைகள் மற்றும் பேனர்கள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை (கோடவுன்) இருந்தது. நேற்று முன்தினம் இரவு சுமார் 12:50 மணியளவில் அந்த தொழிற்சாலையில் தீ பிடித்தது. மளமளவென பரவிய தீ, அருகிலிருந்த பெண்கள் விடுதியின் மீதும் வேகமாகப் பரவியது.
விடுதியில் அப்போது 50க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் தங்கியிருந்தனர். திடீரென ஏற்பட்ட தீ விபத்தை உணர்ந்ததும் பீதியடைந்த பெண்கள் அவசரமாக அறைகளிலிருந்து வெளியேற முயன்றனர். புகை மற்றும் தீயின் வேகம் காரணமாக கீழே இறங்கும் வழி முடங்கிய நிலையில், பல பெண்கள் முதல் மாடியிலிருந்து நேரடியாக கீழே குதித்தனர். பின்னர் காம்பவுண்ட் சுவரை ஏறி சாலைக்கு வெளியேறினர். அவர்களின் சுதாரிப்பு காரணமாக பெரும் உயிரிழப்பு ஏற்படாமல் தப்பினர்.
இதையும் படிங்க: பால் கேனில் சிக்கிய தலை! மணிக்கணக்கில் நீடித்த அவஸ்தை!! ராஜஸ்தான் இளைஞரை பத்திரமாக மீட்ட மக்கள்!
தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களின் உதவியுடன் மீதமிருந்த பெண்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது. சம்பவத்தின் போது பெண்கள் அலறியபடி சுவரில் ஏறி குதிப்பது உள்ளிட்ட காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் பெங்களூரில் உள்ள தனியார் பி.ஜி. விடுதிகளின் பாதுகாப்பு தர நிலையை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது. தீயணைப்பு வசதி, அவசர வெளியேற்ற பாதைகள் உள்ளிட்டவை போதுமானதாக இல்லாதது குறித்து பலரும் கவலை தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் தீ விபத்துக்கான உண்மையான காரணத்தை விரைவில் கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் இழப்பு..! இனி சிபிஐ தான் விசாரிக்கும்..! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!