×
 

உ.பி.யில் நடைமேடை இடிந்து விழுந்து 6 பேர் பலி: 50க்கும் மேற்பட்டோர் காயம்

பாக்பத் நகரில் மூங்கிலால் செய்யப்பட்டிருந்த நடைமேடை சரிந்து விபத்து

உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் நகரில் ஜெயின் மதத்தினர் ஏற்பாடு செய்திருந்த ஒரு விழாவில் மூங்கிலால் செய்யப்பட்டிருந்த நடைமேடை சரிந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டோ் காயமடைந்தனர்.
இது குறித்து பாக்பத் போலீஸார் கூறுகையில் “ பாக்பத் நகரில் ஜெயின் மதத்தைச் சேர்ந்தவர்கள் சார்பில் “லட்டு மகோத்சவ்” நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஆயிரக்கணக்கான ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் லட்டுக்களுடன் கோயிலுக்கு வந்தனர். பக்தர்கள் வசதிக்காக மூங்கிலால் செய்யப்பட்ட பாலம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அளவுக்கு அதிகமாக மக்கள் பாலத்தின் மீது ஏறியதால் பாரம் தாங்காமல் மூங்கில் பாலம் சரிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்” எனத் தெரிவித்தனர்.


பாக்பத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்பித் விஜய்வர்கியா கூறுகையில் “ விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே ஆம்புலன்ஸ், போலீஸார் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், சிறிய காயம் ஏற்பட்டவர்களுக்கு முதலுவதியும், தீவிரமான காயம் அடைந்தவர்களுக்கு தொடர் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்
பாக்பத் மாவட்ட ஆட்சியர் அஸ்மிதா லால் கூறுகையில் “ ஜெயின் சமூகத்தினர் லட்டு மகோத்சவ் நிகழ்ச்சியை இன்று கொண்டாடினர். கடந்த 30 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது. பக்தர்கள் வசதிக்காக புதிதாக அமைக்கப்பட்ட மூங்கில் பாலம் இடிந்து விழுந்ததில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்” எனத் தெரிவித்தார்.


ராகேஷ் ஜெயின் என்ற பக்தர் கூறுகையில் “ ஒவ்வொரு ஆண்டு லட்டு மகோத்சவம அன்று பக்தர்கள் வசதிக்காக மூங்கில் பாலம் அமைக்கப்படும். பக்தர்கள் லட்டுக்களுடன் வந்தபோது திடீரென பாலம் இடிந்து விழுந்தது” எனத் தெரிவித்தார்.
பாலம் இடிந்து விழுந்து 6 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் அறிந்து முதல்வர் ஆதித்யநாத் வருத்தமும், வேதனையும் தெரிவித்துள்ளார். இந்த பகுதியில் உடனடியாக மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ‘சனாதனத்தின் மீது நம்பிக்கையுள்ள எந்த முஸ்லிமும் கும்பமேளாவுக்கு வரலாம்’: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அழைப்பு...

இதையும் படிங்க: நள்ளிரவில் கோர விபத்து; நேருக்கு நேர் மோதிய லாரி - பேருந்து - 4 பேர் உடல் நசுங்கி பலி! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share