“நான் அவன் இல்லை..” - அதிமுக எம்.எல்.ஏ. லீமா ரோஸ் சகோதரர் ஜான் பிரிட்டோ பரபரப்பு பேட்டி...!
போதைப் பொருள் கடத்தலுக்கும், எனக்கும் தொடர்பில்லை என அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸின் சகோதரர் ஜான் பிரிட்டோ விளக்கம் அளித்திருக்கிறார்.
ரூ.258 கோடி மதிப்பிலான சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த வழக்கின் மூளையாகச் செயல்பட்டவர் ஜான் பிரிட்டோ என அமலாக்கத்துறை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. காரணம், ஜான் பிரிட்டோ தவெகவின் முக்கிய நிர்வாகியும், அமைச்சருமான ஆதவ் அர்ஜுனாவின் மாமியாரும் அதிமுக எம்.எல்.ஏவுமான லீமா ரோஸின் சகோதரர் என்று தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸின் சகோதரர் ஜான் பிரிட்டோ காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்திருக்கிறார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், போதைப்பொருள் வழக்கில் தமது பெயர் மற்றும் குடும்பத்தினரின் பெயர் தவறாக இணைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவதூறு பரப்பியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: கொட்டித்தீர்க்க காத்திருக்கும் மழை! வானிலை அப்டேட்! நாளை 3 மாவட்டம், ஜூன் 12ல் 8 மாவட்டங்கள்!!
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் வேறு பணிகளில் இருந்ததால் இந்த விவகாரத்தை கவனிக்கவில்லை. நேற்று இந்த தகவலை பார்த்தவுடன் வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கத் தயாரானேன். நேரம் தாமதமானதால் இன்று காவல்துறையில் புகார் அளித்துள்ளேன்,” என்றார். மேலும், போதைப்பொருள் வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் நபர்களுடன் தமக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், தங்களது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
கேரளாவில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு குறித்து விளக்கமளித்த அவர், அது போதைப்பொருள் வழக்கு அல்ல என்றும், லாட்டரி தொழில் தொடர்பான வழக்கே என்றும் தெரிவித்தார். “கேரள அரசின் லாட்டரி தொடர்பான விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் நாங்கள் தொடர்ந்து ஆஜராகி வருகிறோம். அது நீண்ட காலமாக நடைபெற்று வரும் வழக்கு. அதற்கும் தற்போதைய போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை,” என்றார்.
மேலும், அந்த வழக்கில் தமது மனைவி, தாம் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும், தற்போது பேசப்படும் பிற நபர்களின் பெயர்கள் அதில் இல்லை என்றும் கூறினார். போதைப்பொருள் வழக்குடன் தங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும், சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நாளில் அத்தகைய நிகழ்வு எதுவும் நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் அரசியல் நோக்கத்துடன் பரப்பப்படுவதாகக் குற்றம்சாட்டிய அவர், “நான் பாஜகவில் இருக்கிறேன். முன்பு கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு மாநிலச் செயலாளராக இருந்தேன். தற்போது கட்சியின் உறுப்பினராக உள்ளேன். அரசியல் காரணங்களுக்காகவே என்னை இந்த விவகாரத்துடன் இணைக்க முயற்சிக்கின்றனர்,” என்றார்.
மேலும், சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் மூலம் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டதாகக் கூறிய அவர், சுமார் 50-க்கும் மேற்பட்ட நபர்கள் மற்றும் சேனல்களுக்கு எதிராக புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக சில யூடியூப் சேனல்கள் தமது தங்கையை இந்த வழக்குடன் தொடர்புபடுத்தி செய்திகளை வெளியிட்டதாகவும், அதனைத் தொடர்ந்து பலரும் அதையே பகிர்ந்ததாகவும் கூறினார்.
திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சமூக ஊடகப் பக்கங்களிலும் தம்மை தொடர்புபடுத்தி தகவல்கள் வெளியிடப்பட்டதாகக் கூறிய அவர், அவை தவறான தகவல்கள் என்பதாலேயே புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். மேலும், தங்களது நிறுவனங்கள் கடந்த காலங்களில் பல தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு விளம்பரங்கள் வழங்கியுள்ளதாகவும், இருந்தபோதிலும் சில தவறான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதால் அதுகுறித்தும் விளக்கம் கோரியுள்ளதாகவும் கூறினார்.
இந்த விவகாரத்தால் குடும்பத்தினர், குறிப்பாக தனது மனைவி கடும் மனவேதனை அடைந்துள்ளதாகவும், அவர்களும் தனித்தனியாக புகார் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்தார். சமூக ஊடகங்கள் மற்றும் இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ள தவறான தகவல்களை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவதூறு பரப்பியவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'தர்கா இருப்பதால் மட்டும் நிலம் வக்ப் சொத்தாகிவிடாது' திருவல்லிக்கேணி பிரச்னை!! சென்னை ஐகோர்ட் உத்தரவு!