×
 

தேர்தல் சலுகைகள் தாராளம்! கொட்டிக் கொடுக்க திட்டம்!! கோட்டையில் நடக்கும் தொடர் ஆலோசனை!

சட்டசபை தேர்தலுக்காக, தமிழக மக்களை சலுகை மழையில் குளிர்விக்க, தி.மு.க., அரசு முடிவு செய்து, அதற்கான தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பீகார் சட்டமன்றத் தேர்தலில் இண்டி கூட்டணியின் படுதோல்வி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை ஆதிக்க அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. “பீகாரில் இண்டி ஜெயித்தால் தமிழகத்திலும் ஜெயிக்கலாம்” என்று உறுதியாக நம்பிய ஸ்டாலினுக்கு, காங்கிரஸ் வெறும் ஆறு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இந்தத் தோல்வி தமிழகத்தில் 2026-ல் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக ஒலித்துவிட்டது என்று திமுகவினர் இப்போது ஒப்புக்கொள்கிறார்கள்.

இதனால், உடனடியாக கட்சியின் மூத்த அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோரை ஸ்டாலின் அழைத்து தீவிர ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் ஒரே குரலாக எழுந்த கருத்து, “பீகாரில் பாஜக கூட்டணி ஜெயித்ததற்கு முக்கியக் காரணம் தேர்தலுக்கு முன்பு பெண்களுக்கு வாரி இறைத்த சலுகைகள்தான்; அதே வியூகத்தைத் தமிழகத்திலும் பின்பற்ற வேண்டும்” என்பதாகும்.

பீகாரில் பாஜக கூட்டணி செய்ததை திமுக நிர்வாகிகள் ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டுச் சொன்னார்கள். முதல்வரின் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரில் 75 லட்சம் பெண்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: இந்தவாட்டி பனையூர்ல ரூம் போடுங்க!! விஜயை வளைக்க பாஜக திட்டம்!! அமித்ஷா கொடுத்த ஆர்டர்!

மகளிர் சுயதொழில் கடன் இரண்டு லட்சத்தில் இருந்து பத்து லட்சமாக உயர்த்தப்பட்டது. சுய உதவிக் குழுக்களுக்கு தேர்தலுக்கு முன் பத்தாயிரம் ரூபாய் கடன் வழங்கப்பட்டு, “மறுபடியும் ஜெயித்தால் தள்ளுபடி செய்கிறோம்” என்று உறுதியளிக்கப்பட்டது. இந்த அறிவிப்புகளே பீகார் பெண்களை பாஜக பக்கம் திரும்ப வைத்துவிட்டன.

இதே போன்ற “சலுகை மழையை” தமிழகத்திலும் பொழிய வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் ஸ்டாலினிடம் வலியுறுத்தினார்கள். குறிப்பாக, வருகிற பொங்கல் பண்டிகைக்கு அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி கொடுத்தது போல, ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரருக்கும் இலவசப் பொருட்களுடன் இரண்டாயிரம் ரூபாய் ரொக்கம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். 

தற்போது ஆயிரம் ரூபாயாக இருக்கும் மகளிர் உரிமைத்தொகையை இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும், மகாராஷ்டிராவில் ஏற்கனவே 2500 ரூபாய் ஆக்கியதைச் சுட்டிக்காட்டினார்கள். மேலும் பெண்களுக்கான புதிய கடன் திட்டங்கள், சுயதொழில் உதவித்தொகை போன்றவையும் விரைவில் அறிவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

“கஜானாவில் பணம் இல்லை என்று அதிகாரிகள் சொன்னாலும், எப்படியாவது பணத்தை ஏற்பாடு செய்து இந்த அறிவிப்புகளை உடனே வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் மகளிர் ஓட்டுகள் எதிரணிக்குப் போய்விடும்” என்று மூத்த நிர்வாகிகள் எச்சரித்தார்கள்.

இந்த ஆலோசனைகளை முழுமையாக ஏற்றுக்கொண்ட ஸ்டாலின், உடனடியாக முக்கிய அதிகாரிகளை அழைத்து பேசினார். “தேர்தலுக்கு முன்பு மக்களை மகிழ்விக்கும் வகையில் பெரிய அறிவிப்புகளை விரைவில் வெளியிட வேண்டும். அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் உடனே தொடங்குங்கள்” என்று உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள் மட்டத்தில் தொடர்ச்சியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

திமுக வட்டாரங்கள் தெரிவிக்கையில், “பீகார் தோல்வி ஒரு பாடமாக அமைந்துவிட்டது. இனி தமிழகத்தில் சலுகைப் புயல் வீசும். மகளிர் ஓட்டுகளைத் தக்கவைத்துக்கொள்ள இதுவே ஒரே வழி” என்று உறுதியாகக் கூறுகின்றன.

இதையும் படிங்க: 39 தொகுதி வேணும்!! திமுகவிடம் அடம் பிடிக்கும் காங்., ஐவர் குழு! தேர்தல் கணக்கு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share