“விசில் சத்தம் கொஞ்ச நேரம் தான் கேட்கும்!” புதுக்கோட்டையில் வீடு வீடாகச் சென்று விஜயபாஸ்கர் பிரச்சாரம்!
யார் விசில் அடித்தாலும் அது கொஞ்ச நேரம் கேட்டுவிட்டு அடங்கிவிடும், ஆனால் மக்கள் மனதில் இரட்டை இலை சின்னம் என்றும் நிரந்தரமாக இருக்கும் என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. மற்ற கட்சிகளை முந்திக்கொண்டு, அதிமுக தனது முதற்கட்டத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பிரச்சாரக் களத்தில் குதித்துள்ளது. புதுக்கோட்டையில் இன்று முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவினர் வீடு வீடாகவும், கடை கடையாகவும் சென்று துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள முதற்கட்டத் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள 5 முக்கிய வாக்குறுதிகளை விஜயபாஸ்கர் மக்களிடம் விளக்கினார். தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் மாதம் தோறும் ₹2000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும், பெண்களுக்கு 5 லட்சம் இருசக்கர வாகனங்கள் மானிய விலையில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் கட்டணமில்லாப் பேருந்து பயணம் விரிவுபடுத்தப்படும் மற்றும் வீடற்ற ஏழைகளுக்குப் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் போன்ற வாக்குறுதிகள் துண்டுப் பிரசுரத்தில் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை முன்னிறுத்தும் கூடுதல் நலத்திட்டங்களும் இவற்றுடன் செயல்படுத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: “விசில் ஊழலை ஒழிக்கும் சின்னம்!” தொண்டர்களை உற்சாகப்படுத்திய தளபதி விஜய்!
தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் நடிகர் விஜய், அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளையும் தாக்கிப் பேசியது குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த விஜயபாஸ்கர், விசில் சத்தம் யார் அடித்தாலும் கொஞ்ச நேரம் கேட்கும், அப்புறம் காணாமல் போய்விடும்; ஆனால் மக்கள் மனதில் இரட்டை இலை சின்னம் என்பது நிரந்தரமானது என ஆவேசமாகத் தெரிவித்தார். 2026-ல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் முடிவெடுத்துவிட்டனர்; இரட்டை இலை மகத்தான வெற்றி பெறுவது உறுதி என்றும் அவர் கூறினார்.
மறுபுறம், பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தின் எழுச்சியைக் குறிப்பிட்ட விஜயபாஸ்கர், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய மக்கள் தயாராகிவிட்டதாகக் கூறினார். அமைச்சர் ரகுபதியின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லலாம், ஆனால் வெற்றியைத் தீர்மானிப்பது வாக்காளர்கள் தான்; நாங்கள் மக்களை நம்புகிறோம் என்றார். அதிமுகவின் இந்தத் திடீர் வீடு வீடான பிரச்சாரம் மற்ற அரசியல் கட்சிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: குடியரசு தின பாதுகாப்பு: ரயில் நிலையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு வளையம்! 2,500 போலீசார் தீவிர கண்காணிப்பு!