ஓயாத பிரச்சனை..! அன்புமணிக்கு ஏன் அங்கீகாரம்? டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் விளக்கம்..!
பாமக விஷயத்தில் எடுத்துள்ள முடிவு குறித்து தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது.
பாமகவில் தந்தை ராமதாஸ் - மகன் அன்புமணி இடையேயான மோதல் நீண்ட காலமாகத் தொடர்கிறது. அன்புமணி ராமதாஸ் 2022இல் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் என்று கட்சி விதிகளில் இருந்தது. அதன்படி 2025 மே 28ஆம் தேதியுடன் அவரது பதவி முடிந்ததாக ராமதாஸ் தரப்பு கூறியது. அதன் பிறகு ராமதாஸ் மீண்டும் தலைவராகப் பொறுப்பேற்றதாகவும், தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அன்புமணி தரப்பு 2023இல் பொதுக்குழு நடத்தி தனது பதவிக்காலத்தை 2026 ஆகஸ்ட் வரை நீட்டித்ததாகக் கூறி ஆவணங்களைத் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தது. இதை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், 2025 செப்டம்பர் 9ஆம் தேதி ஒரு கடிதம் அனுப்பியது. அதில் அன்புமணியின் பதவி 2026 ஆகஸ்ட் 1 வரை செல்லுபடியாகும் என்றும், அவரே கட்சித் தலைவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நவம்பர் 27ஆம் தேதியும் இதே போன்ற உறுதிப்படுத்தல் கடிதம் வந்தது. இதனால் அன்புமணி தரப்புக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.இதை எதிர்த்து ராமதாஸ் தரப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அன்புமணி சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என்றும், தேர்தல் ஆணையம் தவறாக ஏற்றுக்கொண்டது என்றும் குற்றம்சாட்டினர்.
இதையும் படிங்க: வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சா எப்படி? தீர்ப்பு எங்க பக்கம் தான்..! ராமதாஸ் உறுதி..!
இந்த வழக்கின் விசாரணையின் போது, கட்சி உரிமை கோரல் பிரச்சனை எழுவதற்கு முன்பாக கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பாமக விஷயத்தில் முடிவெடுத்துள்ளது பற்றி தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இவ்வாறு விளக்கம் கொடுத்துள்ளது. அன்புமணியை பாமக தலைவராக ஏற்கனவே அங்கீகரித்ததை தேர்தல் ஆணையம் தெளிவாக்கி இருக்கிறது.
தேர்தல் ஆணையம் தங்களிடம் உள்ள ஆவணங்கள் அடிப்படையில் அங்கீகரிக்க எந்த தடையும் இல்லை என அப்போது நீதிபதி தெரிவித்தார். பாமகவின் தலைவர், நிர்வாகிகள் யார் என்பதை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு தடை இல்லை என்ற வாதத்தை பதிவு செய்வதாகவும் தேர்தல் ஆணைய வழக்கறிஞர், ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர்களின் வாதத்தை மட்டுமே பதிவு செய்கிறோம் எனவும் டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது. தற்போதைய சூழலில் நீதிமன்றம் பாமக கட்சி வழக்கு தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மாம்பழ சின்னம் யாருக்கு? ரத்து பண்ணுங்க...! ராமதாஸ் தொடர்ந்த வழக்கு பிப். 2 ல் விசாரணை..!