×
 

ஊட்டி, கொடைக்கானலில் பாக்கெட் பாலுக்கு தடை! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஊட்டி கொடைக்கானலில் பாக்கெட் பால் விற்பனையை தடுக்கும் வகையில் தனியார் பால் நிறுவனங்களும் தானியங்கி பால் விற்பனை இயந்திரங்களை அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சர்வதேசச் சுற்றுலாத் தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பிளாஸ்டிக் மாசுபாட்டை முழுமையாகத் தடுக்கும் வகையில், ஆவின் மட்டுமின்றி தனியார் பால் நிறுவனங்களும் உடனடியாகத் தானியங்கி பால் விற்பனை இயந்திரங்களை (Milk Vending Machines) அமைக்க வேண்டும் என்றும், இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் மூலமாகப் பால் விற்பனை செய்வதை அடியோடு நிறுத்த வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலை வாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கான தடையை முழுவீச்சில் தீவிரமாக அமல்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டுத் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் கே. ராஜசேகர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு இன்று மீண்டும் நேரடி விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றத்தின் முந்தைய வழிகாட்டுதல்களின்படி, பிளாஸ்டிக் பாக்கெட் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் ஊட்டி மற்றும் கொடைக்கானல் நகரங்களின் முக்கியப் பகுதிகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் தானியங்கி பால் விற்பனை இயந்திரங்கள் வெற்றிகரமாக நிறுவப்பட்டு பயன்பாட்டில் உள்ளன எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இன்று ஆட்டோ, டாக்ஸி, ஜீப் எதுவுமே ஓடாது... ஊட்டியில் வெடித்தது மிகப்பெரிய போராட்டம் ... காரணம் என்ன?

அரசுத் தரப்பு விளக்கத்தைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், நிறுவப்பட்டுள்ள தானியங்கி பால் விற்பனை இயந்திரங்கள் குறித்து பொதுமக்களிடமும் சுற்றுலாப் பயணிகளிடமும் போதிய அளவில் முறையான விழிப்புணர்வு விளம்பரங்கள் செய்யப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினர். 

தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மலைப் பிரதேசங்களின் சூழலியலைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்; எனவே, ஆவின் நிறுவனத்தைப் போன்று அப்பகுதிகளில் விநியோகம் செய்யும் முன்னணி தனியார் பால் நிறுவனங்களும் தங்களது சொந்த செலவில் தானியங்கி பால் விற்பனை இயந்திரங்களை நிறுவ வேண்டும். 

மேலும், இந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ள குறிப்பிட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் மூலம் பால் விற்பனை செய்வதை முழுமையாகத் தடை செய்து உடனடியாக நிறுத்த வேண்டும் என அரசு நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: மீண்டும் திறப்பு... உதகை செல்வோர் கொஞ்சம் உஷாரா போங்க...மாவட்ட நிர்வாகம் திடீர் மாற்றம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share