×
 

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்குமா?... காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய விசாரணை...!

காவிரியில் வினாடிக்கு 21,413 கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது

காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் திமுக கொடுத்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன. காவிரியில் வினாடிக்கு 21,413 கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டிற்கு உடனடியாக தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவிற்கு உத்தரவிடக் கோரி, திமுக சார்பில் கடந்த 1-ஆம் தேதியும், தமிழ்நாடு அரசு சார்பில் 3-ஆம் தேதியும் உச்சநீதிமன்றத்தில் அவசர மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதில், ஜூன் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஏற்பட்ட 26.954 டிஎம்சி நீர் பற்றாக்குறையை கர்நாடகா வழங்க வலியுறுத்தப்பட்டது.

இதையும் படிங்க: விடிந்ததுமே கர்நாடகாவுக்கு காத்திருந்த ஷாக்... ஆடிப்பெருக்கில் தமிழகத்திற்கு ஓடோடி வரும் காவேரி...!

டெல்லியில் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 139-வது கூட்டத்தில், காவிரியில் 15 நாட்களுக்கு தினந்தோறும் ஒரு டிஎம்சி வீதம் தண்ணீர் திறக்க பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் பரிந்துரையை ஏற்று, காவிரி மேலாண்மை ஆணையமும் 15 நாட்களுக்கு மொத்தம் 15 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிட்டது.

ஆனால், தண்ணீர் திறக்க மறுத்த கர்நாடகம், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது. அதில், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்றும், வறட்சி காலங்களில் நீதிமன்றம் வரையறுத்த தண்ணீரை திறந்துவிடக் கோருவது நியாயமல்ல என்றும் கர்நாடகா குறிப்பிட்டது.

இந்த அவசர மனுவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்க மனு அளித்தது. அணைகளில் தேவைக்கு அதிகமாக தண்ணீர் இருந்தும் தமிழகத்திற்கு திறந்துவிட கர்நாடகா மறுக்கிறது என்றும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா அமல்படுத்துவது கிடையாது என்றும் தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டியது.

எனவே, கர்நாடக அரசின் உண்மைக்குப் புறம்பான அவசர மனுவை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்திய தமிழ்நாடு அரசு, காவிரியில் வினாடிக்கு 21,413 கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா அமர்வில் 61-வது வழக்காக விசாரணையில் இடம்பெற்றுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு வரும் முன்பே, வழக்கம்போல் கர்நாடகம் குறைவான தண்ணீரைத் திறந்துள்ளது. நேற்று முன்தினம் கேஆர்எஸ் அணையிலிருந்து வினாடிக்கு 3,000 கனஅடி நீரை கர்நாடக அரசு திறந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: #BREAKING தவெக ஆட்சியின் 100வது நாள்... விடிந்ததுமே தமிழக மக்களுக்கு சி.எம். விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share