×
 

நடிகர் சுஷாந்த் சிங் பெண் மேலாளர் மர்ம மரணம்! ஆதித்ய தாக்கரே, உத்தவ் தாக்கரே மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

சிபிஐ எப்ஐஆரில், இந்த சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுகளை மறைப்பதற்கான சதியில் அப்போதைய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மற்றும் சிலர் முக்கிய பங்கு வகித்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் அவரது முன்னாள் மேலாளர் திஷா சலியான் மரணம் தொடர்பான வழக்கில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே உள்ளிட்ட சிலரின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சிபிஐ பதிவு செய்துள்ளதாக கூறப்படும் எப்ஐஆர் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மீதும் குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதற்கு சில நாட்களுக்கு முன்பு, அதாவது ஜூன் 8-ம் தேதி அவரது முன்னாள் மேலாளர் திஷா சலியான் மும்பை மாலாடு பகுதியில் உள்ள உயரமான கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

இரு மரணங்களுக்கும் தொடர்பு இருப்பதாக பல்வேறு தரப்பில் சந்தேகங்கள் எழுந்த நிலையில், திஷா சலியானின் தந்தை தொடர்ந்த வழக்கு தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு! சிபிஐ விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க கோரி மனுதாரர்கள் வாதம்!

இதையடுத்து கொலை, கூட்டு பாலியல் பலாத்காரம், குற்றச் சதி, ஆதாரங்களை அழித்தல் மற்றும் தவறான தகவல்களை வழங்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சிபிஐ எப்ஐஆரில், இந்த சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுகளை மறைப்பதற்கான சதியில் அப்போதைய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மற்றும் சிலர் முக்கிய பங்கு வகித்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் வழக்கு ஆவணங்கள் அழிக்கப்பட்டதா, அரசு ஆவணங்களில் முறைகேடு நடைபெற்றதா, அரசு நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆதித்ய தாக்கரே, தினோ மோரியா, சூரஜ் பஞ்சோலி, நடிகை ரியா சக்கரவர்த்தி உள்ளிட்டோரின் பங்கு குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என எப்ஐரில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திஷா சலியானின் பிரேத பரிசோதனை அறிக்கை தாமதப்படுத்தப்பட்டதற்கான காரணம் குறித்தும் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் விசாரணையின் ஒரு பகுதியாக உள்ள நிலையில், அவை நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்ட குற்றங்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. சிபிஐ விசாரணையின் முடிவிலேயே இந்த வழக்கில் உண்மையான நிலை குறித்து தெளிவு கிடைக்கும்.

இதையும் படிங்க: துரை தயாநிதிக்கு புதிய சிக்கல்.! CBI காட்டிய வீடியோவால் திருப்பம்..! மீண்டும் மருத்துவ பரிசோதனைக்கு உத்தரவு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share