×
 

தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படாததற்கு காரணமே இதுதான்... நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!!

தமிழகத்துக்கு 25 சதவீத ஏழை மாணவர்கள் இட ஒதுக்கீட்டுக்கான கல்விக் கட்டண தொகை ஒதுக்கப்படாதது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

2009 ஆம் ஆண்டின் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25% இடங்கள் ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. அவற்றில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் விண்ணப்பங்கள் பெறப்படும். பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் மே மாதத்தில் ஆய்வு செய்யப்பட்டு, ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாக மாணவர் சேர்க்கை முடிக்கப்பட வேண்டும். கடந்த ஆண்டுகளில் இந்த அட்டவணைப்படி தான் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படியான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. ஆனால், நடப்பாண்டில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கைக் கூட இன்று வரை வெளியிடப்படவில்லை. இதை அடுத்து கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி வே.ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

அதில், உடனடியாக மாணவர் சேர்க்கையை தொடங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி ஆர் சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், கல்வி உரிமைச் சட்டத்தில் 25 சதவீத இட ஒதுக்கீட்டு மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தில் 60 சதவீதம் தொகையை மத்திய அரசு 40 சதவீதம் தொகையை மாநில அரசும் வழங்க வேண்டும். மத்திய அரசு, கடந்த 2021ம் கல்வியாண்டு முதல் 2021ம் கல்வியாண்டு வரை எந்த நிதியும் ஒதுக்கவில்லை. 100 சதவீதம் தொகையை மாநில அரசு தான் வழங்கியது. மாணவர்களின் கல்வி விஷயத்தில் அக்கறை கொண்டுள்ள மாநில அரசு, மத்திய அரசு நிதி ஒதுக்காவிட்டால் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவெடுக்க மே 28ஆம் தேதி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை வெளியிடுவதில் தாமதம்... தமிழக அரசை விளாசிய அன்புமணி!!

மத்திய அரசு நிதி ஒதுக்காததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளது என்று தெரிவித்தார். மேலும் தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்காததால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என நீதிபதிகள் குறிப்பிட்ட போது, இதே போல மத்திய அரசு ஏன் நிதி ஒதுக்கவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்ப வேண்டும் என கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் நீதிபதிகளிடம் கேட்டுக் கொண்டார். அதன்படி, நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்த விவரங்களை சமர்ப்பிக்கும் படி மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தனர்.

இதை அடுத்து இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசுடன், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால், 25 சதவீத ஏழை மாணவர்கள் இட ஒதுக்கீட்டுக்கான கல்விக் கட்டண தொகை ஒதுக்கப்படவில்லை. நாடு முழுவதும் பல மாநிலங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், தமிழக அரசு மட்டும் கையெழுத்திடவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்த நீதிபதிகள், 25 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மே 28 ம் தேதி நடக்க உள்ள கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த விவரங்களை தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: கைதிகளிடம் அதை மட்டும் கேட்க கூடாது... சிறை விதிமுறைகளை அதிரடியாக மாற்றிய அரசு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share