DOG லவ்வர்ஸ்!! ரூ.1 லட்சம் வரை அபராதம்! சென்னையில் நாய் வளர்ப்புக்கு புதிய கட்டுப்பாடு!
பிட்புல் மற்றும் ராட்வீலர் ரக நாய் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க வழிவகை செய்யும் தீர்மானம் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் செல்லப்பிராணிகளான நாய்கள் வளர்ப்புக்கு புதிய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பிட்புல் மற்றும் ராட்வீலர் இன நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க டிசம்பர் 20-ஆம் தேதி முதல் முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறி வளர்த்தால் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) மேயர் ஆர். பிரியா தலைமையில் நடைபெற்ற மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே உரிமம் பெற்ற பிட்புல் மற்றும் ராட்வீலர் நாய்களை வீட்டுக்கு வெளியே அழைத்துச் செல்லும்போது கழுத்துப் பட்டை (லீஷிங்) மற்றும் வாய்க் கவசம் (மஸ்லிங்) அணிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதைப் பின்பற்றாத உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கு டிசம்பர் 19 கடைசி நாளாகும். நாளை முதல் மாநகராட்சி அதிகாரிகள் வீடு வீடாக ஆய்வு நடத்தி, உரிமம் பெறாத செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களுக்கு ரூ.5,000 வரை அபராதம் விதிப்பார்கள் என்று முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: தி.குன்றம் தீபம் வழக்கில் வக்கீலை வெளியேற்றிய நீதிபதிகள்!! மதுரை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு!
தற்போது வரை சென்னை மாநகராட்சி பகுதியில் 98,523 செல்லப்பிராணிகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் 56,378 செல்லப்பிராணிகளுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பிட்புல் மற்றும் ராட்வீலர் இன நாய்கள் தாக்குதல் திறன் கொண்டவை என்பதால், அவற்றால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுவதைத் தடுக்கவே இந்தக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அண்மைக் காலத்தில் நாய்கள் கடித்து பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதே கூட்டத்தில் சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு 200 வார்டுகளிலும் கழிவறைகளுடன் கூடிய ஓய்வறைகள் அமைக்கப்படும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இது தூய்மைப் பணியாளர்களின் நலனுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புதிய விதிகள் சென்னை மாநகரில் செல்லப்பிராணி வளர்ப்பவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. உரிமம் பெறுவதற்கான இறுதி நாளான இன்று பலர் விரைவாக உரிமம் பெற முயன்றனர்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் திபம் விவகாரம்! மதுரை உயர்நீதி மன்றத்தில் காரசார விவாதம்!