×
 

வெயில் கொடுமைக்கு இடையே குட் நியூஸ்! ஏப்ரல் 5 முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும்!

அடுத்த 24 மணி நேரத்தில் வறண்ட வானிலை; ஏப்ரல் 3 முதல் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் நிலவி வரும் வறண்ட வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உள் தமிழக மாவட்டங்களிலிருந்து மத்திய கொங்கன் வரை நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, அடுத்த சில தினங்களில் தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்தத் தாழ்வுப் பாதையின் நகர்வு காரணமாகப் பின்வரும் நாட்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது: ஏப்ரல் 02 (இன்று) தென் தமிழகக் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் (தேனி, திண்டுக்கல், நீலகிரி போன்றவை) ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 03 & 04 தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏப்ரல் 05 முதல் 08 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைக்கான வாய்ப்பு இருந்தாலும், பகல் நேர வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவே இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரூர் பரமத்தியில் 38.2° செல்சியஸ் வெப்பம் பதிவாகி மாநிலத்திலேயே முதலிடத்தில் உள்ளது. சமவெளிப் பகுதிகளில் திருத்தணியில் 20.4° செல்சியஸும், மலைப்பகுதிகளில் கொடைக்கானலில் 8.9° செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் ஏப்ரல் 5 முதல் மழைக்கு வாய்ப்பு! மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி மின்னல் எச்சரிக்கை!

ஏப்ரல் 06 வரை தமிழகம் மற்றும் புதுவையில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து, இயல்பை விட 2-3° செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இருப்பினும் வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்பில்லை. இன்று (ஏப் 02) அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸ் ஆக இருக்கும். நாளை (ஏப் 03) வெப்பம் மேலும் அதிகரித்து 36-37° செல்சியஸ் வரை செல்லக்கூடும். இரவு நேரங்களில் புழுக்கம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.

தமிழகக் கடலோரப் பகுதிகள், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் ஏப்ரல் 06-ஆம் தேதி வரை பலத்த காற்று வீச வாய்ப்பில்லை என்பதால், மீனவர்களுக்கான எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. அவர்கள் வழக்கம்போல் கடலுக்குச் செல்லலாம்.

தமிழகத்தில் கோடை மழைக்கான அறிகுறிகள் தென்பட்டாலும், ஏப்ரல் 6 வரை வெப்பத்தின் தாக்கம் குறையாது என்பதால் பொதுமக்கள் நண்பகல் வேளைகளில் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: கோடை வெயிலுக்கு குட்பை! இன்றும் நாளையும் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை! வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share