"பெரம்பூருக்கு ஒரு டிக்கெட்"..! புதிய பேருந்து சேவைகளை தொடங்கி வைத்து 29A - வில் பயணித்த முதல்வர் விஜய்..!
300 புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச் செயலக நுழைவு வாயில் அருகே புதிய பேருந்து சேவையை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். 300 புதிய அரசு பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்திருக்கிறார். தமிழ்நாட்டில் 8 போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தற்போது சுமார் 21,527 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை தினசரி சுமார் 2.05 கோடி பயணிகளுக்கு சேவை செய்கின்றன. இந்த புதிய 300 பேருந்துகள் மாநிலத்தின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் சேர்க்கப்பட்டுள்ளன.
இவை டீசல் மற்றும் சி.என்.ஜி. (CNG) தொழில்நுட்பத்தில் இயங்கும் பேருந்துகளாகும். முதல்வர் விஜய் சமீபத்தில் நடத்திய போக்குவரத்துத் துறை ஆய்வுக் கூட்டத்தில், எதிர்காலத்தில் அனைத்து புதிய பேருந்துகளும் குளிர்சாதன மின்சார பேருந்துகளாகவே கொள்முதல் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்த 300 பேருந்துகள் அந்த திசையில் ஒரு முக்கிய அடியாகக் கருதப்படுகிறது.
இந்த தொடக்க விழா முதலமைச்சரின் 52வது பிறந்தநாளை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. புதிய பேருந்துகள் சென்னைக்கு முன்கூட்டியே கொண்டு வரப்பட்டதால், அவை சில நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதிகாரிகள் தரப்பில், மொகரம் பண்டிகை மற்றும் விடுமுறை காரணமாக சிறப்பு பேருந்து சேவைகள் தேவைப்பட்டதால் பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இன்று சேவை தொடங்கியதால் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. இந்த நடவடிக்கை தமிழ்நாட்டின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் அரசின் முயற்சிகளில் ஒன்றாகும்.
இதையும் படிங்க: திங்கட்கிழமை தவெகவில் இணைகிறார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்!
300 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்ததை தொடர்ந்து பெரம்பூருக்கு இயக்கப்படும் புதிய பேருந்தில் ஏறி முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்ததுடன் முதலமைச்சர் விஜய் 29A பெரம்பூருக்கு செல்லும் பேருந்தில் ஏறி பயணித்துள்ளார். புதிய பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் அவர் கலந்துரையாடினார். தொடர்ந்து சென்னை மாநகர பேருந்தில் அமர்ந்தபடி வீடியோ எடுத்துக் கொண்டே முதல்வர் விஜய் பயணித்தார். நடத்துனரிடம் சில்லறையை கொடுத்து டிக்கெட் பெற்றுக் கொண்டு நடத்துனூரை தனது அருகில் அமர வைத்து பயணித்தார்.
இதையும் படிங்க: "டயலாக் பேசும் டம்மி முதல்வரே"..! கோவையில் கிடந்த பெண் சடலம்... தவெக அரசை விளாசிய திமுக..!