×
 

வாத்தி ரெய்டு.. இன்று சென்னையில் அதிரடியாக களமிறங்கப்போகும் விஜய்... எங்கே, எப்போது தெரியுமா?

சென்னை நந்தனம் மெட்ரோ ரயில் இயக்கக் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் விஜய் இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழக முதலமைச்சர் விஜய், தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளைத் தொடர்ந்து நேரில் ஆய்வு செய்து வருகிறார். இந்த மாத தொடக்கத்தில் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், பின்னர் வியாசர்பாடி பணிமனையில் மின்சார பேருந்துகளுக்கான சார்ஜிங் கட்டமைப்புகளை ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, நெம்மேலி கடல்நீர் குடிநீராக்கும் திட்டத்தையும், பின்னர் கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த வரிசையில், இன்று சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடர்பாகவும் முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று மதியம் தலைமைச் செயலகத்தில் அலுவல் பணிகளை முடித்த பிறகு, பிற்பகல் 2 மணியளவில் ஓமந்தூரார் அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திற்கு முதலமைச்சர் வருகை தர உள்ளார். அங்கிருந்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்து, நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் அலுவலகத்திற்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

நந்தனம் மெட்ரோ ரயில் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இயக்கக் கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிவார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: கனிம வளத்தடை..! அதிரடி காட்டிய தமிழக அரசு...! தமிழக முதல்வர் விஜய்க்கு கேரள முதல்வர் கடிதம்..!!

அதற்கு முன்பாக, மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் போது, வண்ணாரப்பேட்டையிலிருந்து விமான நிலையம் நோக்கி செல்லும் பயணிகளிடம் அவர்களின் குறைகள் மற்றும் தேவைகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, நந்தனம் மெட்ரோ அலுவலகத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்துக் குழும (CUMTA) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, மெட்ரோ ரயிலின் செயல்பாடுகள் மற்றும் சென்னையின் பொதுப் போக்குவரத்தை மேலும் எளிமைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்ய உள்ளார்.

குறிப்பாக, கட்டுப்பாட்டு மையத்தின் நெட்வொர்க் மற்றும் இயக்க மேலாண்மை செயல்பாடுகள் குறித்தும் விரிவாக கேட்டறிவார் என கூறப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத் திட்டம், மொத்தம் 118 கிலோமீட்டர் நீளத்தில் மூன்று வழித்தடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவை, மாதவரம்–சிறுசேரி, மாதவரம்–சோழிங்கநல்லூர் மற்றும் பூந்தமல்லி–கலங்கரை விளக்கம் ஆகிய வழித்தடங்களாகும்.

இந்த மூன்று வழித்தடங்களிலும் ஓட்டுநர் இல்லாத (Driverless) மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில், பூந்தமல்லி–கலங்கரை விளக்கம் வழித்தடத்தில், பூந்தமல்லி முதல் போரூர் வழியாக வடபழனி வரையிலான சுமார் 16 கிலோமீட்டர் தூரப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கடந்த பிப்ரவரி மாதமே ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், விரைவில் இந்த வழித்தடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நந்தனம் மெட்ரோ அலுவலகத்தில் ஆய்வை முடித்த பிறகு, முதலமைச்சர் கிண்டி வழியாக போரூர் மற்றும் பூந்தமல்லி வரை நேரில் சென்று, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகளை ஆய்வு செய்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வை முதலமைச்சர் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: உசுருக்கு உத்தரவாதம் இல்லாமல் இருக்கோம்... தலைமைச் செயலக ஊழியர்கள் முதலமைச்சர் விஜய்க்கு வேண்டுகோள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share