விஸ்வரூபம் எடுக்கும் மின்தடை பிரச்னை! விழிபிதுங்கும் தவெக! அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!
மின் தடை காரணமாக பெறப்படும் புகார்களுக்கு, உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து சரி செய்ய, அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுரை வழங்கினார்.
சென்னை: மின் தடை பிரச்னைகளால் பொது மக்கள் அவதிப்படுவதைத் தடுக்க, புகார்கள் வந்த உடனேயே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும் என முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நேற்று தலைமை செயலகத்தில் மின் துறை ஆய்வுக் கூட்டத்துக்கு முதல்வர் விஜய் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழகம் முழுவதும் மின் உற்பத்தி மற்றும் கொள்முதல் போதுமான அளவில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், சென்னை உள்ளிட்ட நகர்ப்புறங்களில் பழைய மின் உபகரணங்கள், நிலத்தடி கேபிள் பழுதுகள், அதிகரித்த மின் பயன்பாடு மற்றும் கேபிள் சேதம் போன்ற காரணங்களால் மின் தடைகள் ஏற்படுவதாகக் கூறப்பட்டது.
இந்தப் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அரசு பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 2,275 கோடி ரூபாய் மதிப்பில் மின் விநியோகக் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், 121 புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட துணை மின் நிலையங்கள் 10,109 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக 231 துணை மின் நிலையங்கள் 15,032 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சமூகநீதி வேணாம்! பெரிய துறை தாங்க! அமைச்சரவையில் வேறு துறை கேட்டு அடம் பிடிக்கும் திருமாவளவன்!
மின் புகார்களுக்கு விரைவான தீர்வு அளிக்கும் வகையில் 77 புதிய மின் தடை நீக்க மையங்கள், 7 கூடுதல் பழுது நீக்கும் குழுக்கள், 125 பழுது நீக்கும் வாகனங்கள் மற்றும் 10 உயர்மட்ட கண்காணிப்புக் குழுக்கள் செயல்பாட்டில் உள்ளன. மின் பழுதுகளை சரி செய்ய 15,058 மின் பணியாளர்களை நியமிக்கவும், தேவையான மின் தளவாடப் பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்யவும், பணியாளர்களை ரோந்து பணியில் ஈடுபடுத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரியத் தலைமை அலுவலகத்தில் மின் துறை அமைச்சர் நிர்மல்குமாருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இது முதல் முறையாகும்.
மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் கூறுகையில், “தி.மு.க. ஆட்சியில் ஆண்டுக்கு 6 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தும் கொள்கை தவறானது. பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய முடிவு எடுக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது. மின் துறை மற்றும் சிறைத் துறை ஊழியர்களை தேவையில்லாமல் பணியிட மாற்றம் செய்யும் நடைமுறையை முழுமையாக நிறுத்தியுள்ளோம். இனி சீனியாரிட்டி அடிப்படையில் மட்டுமே மாறுதல்கள் வழங்கப்படும். துண்டுச்சீட்டு முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது” என்றார்.
மக்கள் மின் கோளாறுகளை மின்னகம் சேவை மையங்கள் வாயிலாக தெரிவித்து உடனடி தீர்வு பெறலாம் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: ராஜினாமா செய்து தவெகவுக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள்! விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ்! 7 நாள் கெடு!