×
 

இது என்ன 1996-ன்னு நினைச்சிங்களா ஸ்டாலின்... கறார் காட்டும் ராகுல்... திமுகவை ஒரு ‘கை’ பார்க்க காத்திருக்கும் காங்கிரஸ்...!

விஜய்யின் உண்மையான பலம் இன்னும் தெளிவாக தெரியாத நிலையில், திமுக உடனான நீண்ட அரசியல் பயணத்தை தொடர விரும்பும் தலைவர்கள் கூட்டணி தொடர வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.

1996-ஆம் ஆண்டிலேயே தொண்டர்களின் உணர்வுகளை புறக்கணித்து முடிவெடுத்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை டெல்லி காங்கிரஸ் தலைமை கடுமையாகப் பாடமாகக் கற்றுக்கொண்டது. அதிமுகவுக்கு எதிரான மக்கள் மனநிலை அப்போது பெரும் அலைபோல் பரவியிருந்த நிலையில், மூப்பனார் “மூழ்கும் கப்பலில் பயணிக்க வேண்டாம்” என்ற எச்சரிக்கையுடன் கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், டெல்லி தலைமை அவரது கோரிக்கையை ஏற்காததால், அவர் தமிழக காங்கிரஸை உடைத்து தமாகா உருவாக்கினார். திமுக கூட்டணியில் ரஜினிகாந்தின் ஆதரவோடு போட்டியிட்ட தமாகா 39 இடங்களை வென்றது; அதிமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற முடியாமல் முற்றிலும் தோல்வியடைந்தது. மக்களவைத் தேர்தலிலும் தமாகா 20 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்த வெற்றி, தொண்டர்களின் உணர்வுகளை புறக்கணித்தால் கட்சி எவ்வாறு சிதறும் என்பதை டெல்லி தலைமைக்கு உணர்த்தியது.

முப்பது ஆண்டுகள் கழித்து, காங்கிரஸ் மீண்டும் அதேபோன்ற சிக்கலான நிலையை எதிர்கொள்கிறது. தேர்தல் பேச்சு தொடங்குவதற்கு முன்பு சுமுகமாக இருந்த காங்கிரஸ்–திமுக உறவு, தற்போது ஊசலாட்டத்தில் உள்ளது. அதிக தொகுதிகள், அதிகார பங்கு போன்ற கோரிக்கைகளை மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட சிலர் முன்வைத்ததால், கூட்டணிக்குள் நெருப்பு பரவியது. தொண்டர்களின் மனதில் “தவெக-வுடன் கூட்டணி வைத்தால், தமிழகம் முழுவதும் 70–80 இடங்களில் கை சின்னம் களத்தில் நிற்கும்; கட்சிக்கும் மரியாதை கிடைக்கும்” என்ற எண்ணம் விதைக்கப்பட்டுள்ளது. ஆனால், விஜய்யின் உண்மையான பலம் இன்னும் தெளிவாக தெரியாத நிலையில், திமுக உடனான நீண்ட அரசியல் பயணத்தை தொடர விரும்பும் தலைவர்கள் கூட்டணி தொடர வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.

தற்போது, காங்கிரஸ் சிட்டிங் எம்எல்ஏக்கள் உள்ள தொகுதிகளில் திமுகவை கோபப்படுத்தும் வகையில் எந்தப் பிரளயமும் வெடிக்காமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது. ஆனால், கூட்டணிப் பேச்சுவார்த்தையில் காங்கிரஸின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக திமுக பிடிவாதம் காட்டினால், 1996 போல இன்னொரு பிளவு தமிழக காங்கிரஸில் நிகழ வாய்ப்பு உள்ளது. அப்போது தொண்டர்களின் விருப்பத்தால் பிளவு ஏற்பட்டது; இம்முறை பிளவு ஏற்பட்டால் அது பதவிகளை தக்கவைக்கத் துடிக்கும் தலைவர்களின் அரசியல் கணக்குகளால் நிகழும். அப்போது நடந்த பிளவு இயல்பானதாக இருந்தது; இப்போது நிகழும் பிளவின் பின்னணியில் திமுகவின் அரசியல் திட்டமும் இருக்கும்.

இதையும் படிங்க: திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இழுபறியா?... யாருமே எதிர்பார்க்காத பதில் கொடுத்த தங்க தமிழ்ச்செல்வன்...!!

1996-இல் பிளவு தேர்தலில் சாதனை படைத்து, டெல்லி தலைமைக்கு பாடம் கற்றுக் கொடுத்தது. ஆனால், இப்போது பிளவு ஏற்பட்டால், தேர்தலுக்குப் பிறகு “தலைமை எடுத்த முடிவு சரிதான்” என பிரிந்து சென்றவர்களே உணர வேண்டிய நிலை உருவாகலாம் என, காங்கிரஸுக்குள் விஜய் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். மேலும், டெல்லி காங்கிரஸ் தலைமை விஜய்யுடன் கூட்டணி என முடிவெடுத்தால், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து செல்வப்பெருந்தகை நீக்கப்படலாம்; அந்த இடம் மாணிக்கம் தாகூருக்கோ அல்லது அவரது விசுவாசிக்கோ ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

1996-இல் தொண்டர்களின் உணர்வுகளை புறக்கணித்ததால் காங்கிரஸ் கடுமையான தோல்வியைச் சந்தித்தது. இன்று மீண்டும் அதேபோன்ற சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில், தலைமை எவ்வாறு முடிவெடுக்கிறது என்பதே தமிழக காங்கிரஸின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். தொண்டர்களின் உணர்வுகளை மதிக்காமல், பதவி–அதிகார கணக்கில் மட்டும் முடிவு எடுக்கப்பட்டால், அது இன்னொரு பிளவுக்குத் தள்ளும் அபாயம் மிகுந்துள்ளது.

இதையும் படிங்க: கதர் சட்டை கிழியும் அளவுக்கு காங்கிரஸில் பிரச்சனை… திமுக எதையும் கண்டுக்கல..!! வைகோ பேட்டி..!!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share