வீட்டுக்குள் புகுந்து அடாவடியாய் அடிக்கப்பட்ட கொசு மருந்து... கோவையை உலுக்கிய சம்பவத்தில் வெளியானது பகீர் தகவல்...!
பேரூராட்சி சார்பில் அடிக்கப்பட்ட கொசு மருந்துதான் இருவரின் உயிரிழப்புக்கும் காரணம் என்ற செய்தி வேகமாகப் பரவியது.
கோவையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையாக, பேரூராட்சி பணியாளர்கள் வீடுகளுக்குள் கொசு மருந்து அடித்தபோது இருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம், மன்னூர் அருகே உள்ள உப்புத்தோட்டம் பகுதியில் நேற்று பேரூராட்சி சார்பில் கொசு மருந்து அடிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் சுமார் நான்கு பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததால், பேரூராட்சி சார்பில் அங்குள்ள கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் பிற பகுதிகளில் கொசு மருந்து அடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பணியாளர்கள் நேற்று அப்பகுதிக்குச் சென்று கொசு மருந்து அடித்துவிட்டு சென்றுள்ளனர்.
கொசு மருந்து அடிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அந்தப் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய மோகன், ஆட்டோ ஓட்டுநர், மற்றும் அதே பகுதிக்கு அருகில் வசித்து வந்த 75 வயதுடைய பிரேமா என்ற மூதாட்டி ஆகிய இருவரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து, பேரூராட்சி சார்பில் அடிக்கப்பட்ட கொசு மருந்துதான் இருவரின் உயிரிழப்புக்கும் காரணம் என்ற செய்தி வேகமாகப் பரவியது.
இதையும் படிங்க: இன்று தொடங்குகிறது மருத்துவக் கலந்தாய்வு... மாணவர்களே இதையெல்லாம் எக்காரணம் கொண்டும் மறந்துடாதீங்க...!
இதுதொடர்பாக, கொசு மருந்து அடித்ததன் காரணமாகத்தான் இருவரும் உயிரிழந்தார்களா என்ற கோணத்தில் மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
முதற்கட்ட விசாரணையில், பேரூராட்சி சார்பில் பயன்படுத்தப்பட்ட மருந்து காலாவதியானதா அல்லது கூடுதலாக தண்ணீர் கலந்து மருந்து அடித்ததால் அதிகளவில் புகை வெளியேறி, அதன் காரணமாக அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இதில், மருந்து காலாவதியாகவில்லை என்றும், உரிய அளவு தண்ணீர் கலந்து முறையாகவே மருந்து அடிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறைக்கு இதுவரை எந்தவிதமான புகாரும் வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உறவினர்களோ அல்லது குடும்பத்தினரோ, கொசு மருந்து காரணமாகத்தான் அவர்கள் உயிரிழந்ததாக எந்தக் குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இந்த இரு உயிரிழப்புகளுக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய தீவிர விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒருவேளை கொசு மருந்து காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
இதேபோல், பேரூராட்சி தரப்பில் விசாரித்தபோது, அப்பகுதியில் உள்ள சுயேச்சை கவுன்சிலருக்கும் செயல் அலுவலருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும், அதன் காரணமாக இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன. சுமார் 200 வீடுகள் உள்ள அந்தப் பகுதியில், குறிப்பிட்ட இரண்டு பேருக்கு மட்டும் எப்படி மூச்சுத்திணறல் ஏற்பட்டது என்ற கேள்வியும் விசாரணையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், உயிரிழந்த இருவரும் ஏற்கனவே நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளுக்காக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்ததாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, அவர்கள் கொசு மருந்து அடித்ததன் காரணமாக உயிரிழந்தார்களா இல்லையா என்பது பிரேதப் பரிசோதனைக்குப் பிறகுதான் உறுதி செய்ய முடியும். ஆனால், நேற்று ஒருவரின் உடல் தகனம் செய்யப்பட்டுவிட்டது. இன்று மற்றொருவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு, உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.
புகார் அளிக்கப்படாததால் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் மூச்சுத்திணறல் காரணமாகவே உயிரிழந்ததாகவும், கொசு மருந்து காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் எந்தவிதமான அறிக்கையும் வழங்காத நிலையில், இந்தச் செய்தி தவறாகப் பரப்பப்பட்டு வருவதாகவும் பேரூராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த திட்டம்: அமைச்சர் அருண்ராஜை நேரில் சந்தித்த ஆஸ்திரேலிய தூதர்!