×
 

#BREAKING 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியாருக்கு தூக்கு தண்டனை... நெல்லை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...! 

ஜெப கூட்டத்திற்கு அழைத்துச் சென்ற 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார் ஆபிரகாமுக்கு தூக்கு தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் தீர்ப்பு. 

நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்தவர் பாதிரியார் ஆபிரகாம். இவர் அப்பகுதியில் மதபோதனை செய்வதுடன், ஊழியம் செய்வதற்காக பல்வேறு பகுதிகளுக்கும் அங்குள்ளவர்களை அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு மதபோதனை செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்டபோது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8, 10, 12 மற்றும் 13 வயதுடைய மூன்று சிறுமிகளும், அவர்களது உறவினரான 13 வயது சிறுமியும் என நான்கு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆபிரகாம் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரிப்பதற்காக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சண்முகம் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு, வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது.

வழக்கின் அனைத்து சாட்சிகளும் நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, இறுதி விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் அடிப்படையில் குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், மதபோதகர் ஆபிரகாமுக்கு தூக்கு தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரிதிலும் அரிதான வழக்கு என்பதால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனடிப்படையில், தற்போது தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள சூழலில், நீதிமன்ற வளாகத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தினர் திரண்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. காவல்துறையினரும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இதுவரை சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக நான்கு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நான்கு சிறுமிகளை மதபோதகர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தற்போது தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முழுவதும் பரபரப்பாகக் காணப்படுகிறது. காவல்துறை அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: தலையில் வைத்து கொண்டாடிய ஜென் சி-க்கு ஆப்பு வைத்த சி.எம்.விஜய்... ஆர்.பி.உதயகுமார் நேரடி அட்டாக்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share