×
 

வாகன விபத்து இழப்பீடு தாமதம்! தலைமை செயலாளர், டிஜிபி-க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

வாகன விபத்து வழக்கு ஆவணங்களை இன்சூரன்ஸ் புலனாய்வாளர்களுக்கு வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் தலைமைச் செயலாளர் டிஜிபி பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சாலை விபத்து தொடர்பான வழக்குகளின் ஆவணங்களை இன்சூரன்ஸ் நிறுவனங்களின் புலனாய்வாளர்களுக்கு விரைவாக வழங்காமல் காவல்துறை மெத்தனம் காட்டுவதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைப்பதில் பெரும் காலதாமதம் ஏற்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கில் தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் 2 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த விஜய்ராஜேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், வாகன விபத்துகளில் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நீதிமன்றங்கள் மூலம் காப்பீட்டு இழப்பீடு கோரும் போது, இன்சூரன்ஸ் நிறுவனங்களால் நியமிக்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட புலனாய்வாளர்கள் காவல் நிலையங்களிலிருந்து விபத்து தொடர்பான முதல் தகவல் அறிக்கை, தள வரைபடம், மோட்டார் வாகன ஆய்வாளர் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்று கள ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், இந்த ஆவணங்களை நேரில் வழங்காமல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு காவல்துறையினர் கூறுகின்றனர் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், காவல்துறையின் ஆன்லைன் தளங்களில் நிலவும் மென்பொருள் கோளாறுகள் உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலான விபத்து வழக்குகளின் ஆவணங்களை முழுமையாகப் பதிவிறக்கம் செய்ய முடிவதில்லை. பல விபத்து வழக்குகளில் இறுதி அறிக்கைகளும் உரிய காலத்தில் தாக்கல் செய்யப்படாமல் பல மாதங்களாக நிலுவையில் கிடக்கின்றன. இதனால் விபத்தில் காயமடைந்த ஏழை எளிய மக்களுக்கும், உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கும் கிடைக்க வேண்டிய நியாயமான காப்பீட்டுத் தொகை பல ஆண்டுகள் தாமதமாகிறது. எனவே, உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி ஆவணங்களை உடனடியாக வழங்கக் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் வலியுறுத்தியிருந்தார்.

இதையும் படிங்க: விசாரணை கைதியை முடி வெட்ட கட்டாயப்படுத்த கூடாது! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக தீவிர விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த விவகாரம் விபத்துகளில் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமையோடு தொடர்புடையது என்பதைச் சுட்டிக்காட்டி, மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்துத் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) ஆகியோர் 2 வாரங்களுக்குள் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: சட்டமன்றம் இல்ல... சினிமா மன்றம்..! தவெக ஆட்சி நிலைக்காது..!! EPS திட்டவட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share