×
 

இன்டிகோவிற்கு ரூ.22.2 கோடி அபராதம்: டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

இன்டிகோ விமான நிறுவனம் மேற்கொண்ட பெருமளவிலான விமான ரத்து மற்றும் தாமதங்கள் தொடர்பாக, அந்த நிறுவனத்திற்கு ₹22.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் இன்டிகோ (IndiGo) விமான நிறுவனம் மேற்கொண்ட பெருமளவிலான விமான ரத்து மற்றும் தாமதங்கள் தொடர்பாக, அந்த நிறுவனத்திற்கு ரூ.22.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக  மத்திய  அரசு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, இந்தச் சேவை குளறுபடிகளுக்குக் காரணமான அந்த நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரை உடனடியாகப் பணியிலிருந்து நீக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் அரசு குறிப்பிட்டுள்ளது. சுமார் 3 லட்சம் பயணிகள் கடும் அவதிக்குள்ளான இந்த விவகாரம், இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிசம்பர் 3 முதல் 10 வரையிலான காலகட்டத்தில், இன்டிகோ நிறுவனம் சுமார் 2,507 விமானங்களை ரத்து செய்ததோடு, 1,852 விமானங்கள் பல மணிநேரம் தாமதமாக இயக்கப்பட்டன. இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) நடத்திய விரிவான விசாரணையில் பல குளறுபடிகள் கண்டறியப்பட்டன:

புதிய விமானப் பணி நேரக் கட்டுப்பாடுகளை (FDTL) அமல்படுத்துவதில் ஏற்பட்ட தோல்வி மற்றும் போதிய விமானிகள் இல்லாமலேயே அதிக விமானங்களை இயக்கியது. லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, பயணிகளின் பாதுகாப்பையும் வசதியையும் புறக்கணித்து விமானச் அட்டவணையைத் தயாரித்தது. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) மற்றும் செயல்பாட்டு அதிகாரிக்கு (COO) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தின் மூத்த துணைத் தலைவர் ஜேசன் ஹெர்டரை (Jason Herter) அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வங்கிகள் முடங்கும் அபாயம்! ஜனவரி 27-ல் நாடு தழுவிய வேலைநிறுத்தம்!

தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா தலைமையிலான அமர்வு முன் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் சர்மா, இன்டிகோ நிறுவனம் ரூ.50 கோடிக்கான வங்கி உத்தரவாதத்தை (Bank Guarantee) சமர்ப்பிக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற குளறுபடிகள் நடக்காது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பயணிகளுக்குத் திரும்ப வழங்கப்பட்ட தொகைகள் மற்றும் இழப்பீடுகள் குறித்த பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் இன்டிகோ நிறுவனத்திற்கு இரண்டு வார கால அவகாசம் அளித்துள்ளது.

இதையும் படிங்க: குடியரசு தினத்துக்கு ஐரோப்பிய சிறப்பு விருந்தினர்கள்.. உர்சுலா மற்றும் அன்டோனியோ கோஸ்டா வருகை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share