உலக அரங்கில் தீபாவளிக்கு கிடைத்த பெருமை! இந்தியாவுக்கு UNESCOஅங்கீகாரம்! பிரதமர் மோடி மகிழ்ச்சி!
யுனெஸ்கோ அமைப்பின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில், இந்துக்களின் பண்டிகையான தீபாவளி சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அறிவித்துள்ளார்.
இந்தியக் கலாச்சாரத்தின் உச்சபட்ச அடையாளமாகத் திகழும் இந்துக்களின் பண்டிகையான தீபாவளி, யுனெஸ்கோ அமைப்பின் அருவமான கலாச்சார பாரம்பரியப் பட்டியலில் இன்று அதிகாரப்பூர்வமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்மூலம், இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்ட 16வது இந்தியப் பாரம்பரியமாகத் தீபாவளி மாறியுள்ளது.
யுனெஸ்கோ தனது சமூக ஊடகங்களில் இந்தியாவை வாழ்த்தி இந்த அறிவிப்பை வெளியிட்டது. இந்தியா உட்படப் பல நாடுகளின் கலாச்சாரச் சின்னங்களும் இந்தப் பட்டியலில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளன. தீபாவளிக்கு முன்பு, ஏற்கனவே கும்பமேளா, யோகா, வேத மந்திரங்கள், கொல்கத்தாவின் துர்கா பூஜை, ராம்லீலா, கர்பா, கேரளாவின் முடியேட்டு, சாவ் நடனம், இமயமலைப் பாரம்பரியப் புத்த மந்திரங்கள், நவ்ரோஸ் மற்றும் சங்கராந்தி-பொங்கல்-பைசாகி போன்ற 15 இந்திய மரபுகள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தன.
யுனெஸ்கோவின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி தமது சமூக ஊடகப் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் இந்தச் செய்தியால் உற்சாகமாகவும் பெருமையாகவும் உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். "எங்களைப் பொறுத்தவரை, தீபாவளி என்பது வெறும் பண்டிகை மட்டுமல்ல, அது நமது கலாச்சாரத்துடனும் நமது மதிப்புகளுடனும் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளது. இது நமது நாகரிகத்தின் ஆன்மா" என்று அவர் தெரிவித்தார். தீபாவளி ஒளி மற்றும் நீதியைக் குறிக்கிறது என்றும், யுனெஸ்கோ பட்டியலில் சேர்வது உலகளவில் இந்தப் பண்டிகையை மேலும் பிரபலப்படுத்தும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: IND vs SA 1st T20: பந்துவீச்சில் மிரட்டிய இந்தியா! 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
இதேபோல், டெல்லி முதல்வர் ரேகா குப்தா இந்த முடிவை வரவேற்றுள்ளார். "ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான நமது சனாதன மரபுகளின் தெய்வீகத்தன்மை மற்றும் உலகளாவிய தளத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது" என்று அவர் பெருமிதம் தெரிவித்தார். தீபங்களின் பண்டிகையான தீபாவளி இந்தப் பட்டியலில் சேர்க்கப்படுவது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை சேர்க்கும் தருணம் என்று கூறிய அவர், இந்த மரியாதை தீபாவளியின் நித்திய மதிப்புகளான ஒளி, நல்லிணக்கம் மற்றும் கண்ணியத்தை உலகளவில் ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது என்று தெளிவுபடுத்தினார். மேலும், இந்தச் சாதனை பிரதமர் நரேந்திர மோடியின் "பாரம்பரியத்துடன் வளர்ச்சியும்" என்ற உறுதியை மேலும் வலுப்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: "போலி வாக்காளரை கண்டறியும் மென்பொருள் பயனற்றது": உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம்!