"தமிழ்நாட்டுக்கு முட்டுக்கட்டை போடும் பாஜக" ... திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!!
மத்திய பாஜக அரசை கண்டித்து வரும் 15ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் NDA அரசையும் அதன் அடிமைக் கூட்டணியையும் கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகர, பகுதி, பேரூர்களில் வரும் 15ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 10.30 மணிக்கு மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பாஜக NDA அரசின் தவறான வெளியுறவுக் கொள்கையினாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததன் விளைவாகவும் இன்று நாடு முழுவதும் சமையல் கேஸ் சிலிண்டருக்கும், வணிக ரீதியிலான கேஸ் சிலிண்டருக்கும் தட்டுபாடு ஏற்பட்டு மக்கள் அவதியுற்று வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உணவகங்கள், வணிக நிறுவனங்கள் சரிவர இயங்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
சிறு-குறு தொழில்கள் உள்ள அதிக தொழில்வளமிக்க தமிழ்நாடு இந்த கடுமையான பாதிப்பை சந்திக்கும் என்பதால் ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து நிலைமையை சரிசெய்ய வேண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தி இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. ஆனால் தற்போது வரை மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கி நிலைமையை சீராக்க முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நாடாளுமன்றத்தில் இதைப்பற்றி பேசவே பிரதமர் மறுத்து வருவது கண்டத்திற்குரியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்..! தனிக்கட்சி ஆரம்பித்த புகழேந்தி திமுகவில் ஐக்கியம்..!!
அதோடு தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி , நூறு நாள் வேலை திட்ட நிதி, குடிநீர் இணைப்பு நிதி என எந்த நிதியையும் ஒதுக்காமல் நிறுத்தி வைத்திருப்பது. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம், ஒசூர் விமான நிலையம் என எந்தவொரு வளர்ச்சித் திட்டத்திற்கும் அனுமதி தராமல் முட்டுக்கட்டை போட்டு வருவதாகவும், மும்மொழி திணிப்பு என்ற பெயரில் தமிழ்மொழியை அழிக்க துடிப்பது, கீழடி அகழ்வாய்வு முடிவுகளை ஏற்க மறுப்பது என தமிழ்நாட்டைத் தொடர்ந்து மத்திய பாஜக அரசு வஞ்சித்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் NDA அரசையும் அதன் அடிமைக் கூட்டணியையும் கண்டித்து வரும் மார்ச் 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, காலை 10.30 மணியளவில், கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தொகுதி பங்கீடு தீவிரம்..!! கொமதேகவிற்கு 2 தொகுதிகள்... உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தானது..!!