இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை...!
பரபரப்பான நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது.
தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கூட்டணி ஆட்சியை தக்க வைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. பரபரப்பான நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்த பரபரப்பான சூழலில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயம் வளாகத்தில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவதற்காக அதிமுக – பாஜக கூட்டணி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் போன்ற கட்சிகளும் தனித்த அரசியல் முயற்சிகளுடன் களத்தில் செயற்பட்டு வருகின்றன. பெரிய கூட்டணியை உருவாக்கி திமுக முன்னணியில் இருப்பது அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.
முதலில் இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மார்ச் 15 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அது மாற்றப்பட்டு மார்ச் 16 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கும் இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் பங்கேற்க உள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கள நிலவரம், தேர்தல் பிரச்சார வியூகங்கள், எதிர்க்கட்சிகளுக்கு எதிரான அரசியல் அணுகுமுறைகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: உணவக மின் பயன்பாட்டுக்கு மானியம்..! அவசர ஆலோசனைக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!!
திமுகவின் பலமான பகுதிகள், பலவீனமான பகுதிகள், எதிர்க்கட்சிகளின் தாக்கம், எந்த மாவட்டங்களில் பெரிய கூட்டங்கள் நடத்த வேண்டும், சமூக வலைதள பிரச்சாரம் எப்படி அதிகரிக்க வேண்டும், இளைஞர்கள் மற்றும் பெண்களை எப்படி அணுக வேண்டும், சிக்கல் உள்ள தொகுதிகளை எப்படி சமாளிப்பது இவற்றை மாவட்ட செயலாளர்கள் நேரடியாக விளக்க வாய்ப்பு உள்ளது. மேலும் தற்போதைய எம்.எல்.ஏக்கள் மீண்டும் போட்டியிடலாமா?, புதிய முகங்களை நிறுத்த வேண்டுமா?, உள்ளூர் எதிர்ப்புகள் உள்ளதா? என்பது தொடர்பாகவும் மாவட்ட செயலாளர்களிடம் கேட்டறிய வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை... போலீசை செருப்பால் அடித்த மாணவி..! கிழித்து தொங்கவிட்ட தவெக..!!