கோவையை குறிவைக்கும் திமுக! களத்தில் செந்தில்பாலாஜி! அதிமுக கோட்டையை அசைத்து பார்க்கும் ஸ்கெட்ச்!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும் யாரெல்லாம் போட்டியிடுவார்கள் என்ற பேச்சு உள்ளூர் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துவிட்டது.
கோயம்புத்தூர் மாவட்டம் எப்போதுமே அதிமுகவின் வலுவான கோட்டையாக இருந்து வந்துள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவையின் 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வென்றது. ஆனால் இந்த முறை நிலைமை மாற்றப்பட வேண்டும் என்று திமுக மிகத் தீவிரமாகக் கங்கணம் கட்டியுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செந்தில் பாலாஜியை கோவை மாவட்டப் பொறுப்பாளராக நியமித்தார். அதன் பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் திமுக கோவையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கோவை மாநகராட்சி உள்பட பல நகராட்சிகளையும் கைப்பற்றியது. இப்போது சட்டமன்றத் தேர்தலில் கோவையை முழுமையாகக் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் திமுக தயாராகி வருகிறது.
திமுக வட்டாரங்களில் இருந்து கசியும் தகவல்களின்படி, கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் 8 இடங்களில் திமுக நேரடியாகப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள 2 தொகுதிகளை (மிஞ்சினால் 3) கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளது. கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், வேட்பாளர் தேர்விலும் திமுக தலைமை கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
இதையும் படிங்க: ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம்!! தேஜ கூட்டணியுடன் தமிழ்நாடு!! ஆட்டத்தை ஆரம்பித்தார் மோடி!
மேட்டுப்பாளையம் தொகுதியில் கூடலூர் நகராட்சி தலைவரும், கூடலூர் நகர திமுக செயலாளருமான அறிவரசுவுக்கு வலுவான வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரமும் பரிசீலனையில் உள்ளார்.
கவுண்டம்பாளையம் தொகுதியில் சர்க்கார் சாமக்குளம் ஒன்றிய செயலாளர் எஸ்.பி.சுரேஷ்குமார் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது. தொண்டாமுத்தூர் தொகுதியில் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.ரவிக்கு வாய்ப்பு பிரகாசமாகத் தெரிகிறது.
கோவை தெற்கு தொகுதியில் திமுக மாணவரணி செயலாளர் இரா.ராஜீவ் காந்தி வேட்பாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் நம்பிக்கையைப் பெற்றவர் இவர். செந்தில் பாலாஜியின் ஆதரவும் இருப்பதால் இத்தொகுதியில் ராஜீவ் காந்தி ரெடியாகி வருகிறார்.
சிங்காநல்லூர் தொகுதியில் கோவை மாநகர மாவட்டச் செயலாளர் செந்தமிழ்ச் செல்வன்க்கு வாய்ப்பு அதிகம். செந்தில் பாலாஜிக்கு மிக நெருக்கமானவரான இவருக்கு இந்த சீட் கிடைக்கும் என்று உள்ளூர் திமுகவினர் தெரிவிக்கின்றனர். சூலூர் தொகுதியில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் வேட்பாளராக அறிவிக்கப்படலாம்.
பொள்ளாச்சி தொகுதியில் திமுக ஐடி விங் இணைச் செயலாளர் டாக்டர் மகேந்திரன் போட்டியிட வாய்ப்புள்ளது. முன்பு மக்கள் நீதி மய்யத்தில் கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகள் பெற்றவர் இவர்.
கிணத்துக்கடவு தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட குறிச்சி பிரபாகன் மீண்டும் களமிறக்கப்படலாம். ஆனால் இத்தொகுதியை கொங்கு நாடு மக்கள் கட்சிக்கு ஒதுக்கி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்கவும் வாய்ப்பு உள்ளது. கோவை வடக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கும், வால்பாறை தொகுதியை சிபிஐ-க்கும் ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளது. கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என்றாலும், தற்போதைய நிலவரப்படி இதுவே திட்டம்.
அதிமுகவினரோ, “கோவை எங்கள் கோட்டைதான், இம்முறையும் வெல்வோம்” என்று கொக்கரிக்கின்றனர். ஆனால் திமுகவினர், செந்தில் பாலாஜியின் தலைமையில் கோவையை முழுமையாகக் கைப்பற்றுவோம் என்று உறுதியாக இருக்கின்றனர்.
வேட்பாளர் தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவை அரசியல் களம் இப்போதே சூடுபிடித்து வருகிறது!
இதையும் படிங்க: தேர்தல் அறிவிப்பதற்குள் முந்திக்கணும்!! அதிமுக பண்ணுன தப்பை பண்ணவே கூடாது!! திமுக பட்ஜெட் ப்ளான்!!