"அமித் ஷாவைச் சந்திக்க மாட்டேன்!" தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இணையாது: டிடிவி தினகரன் திட்டவட்டம்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைத் தாம் சந்திக்கப் போவதில்லை, அவர்கள் என்ன சந்திக்க அழைக்கவும் மாட்டார்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேறிய நிலையில், நயினார் நாகேந்திரன் பாஜக தலைவராகப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே டிடிவி தினகரனும் கூட்டணியில் இருந்து வெளியேறினார். அப்போது, "நாளை ஓபிஎஸ்-க்கு நடந்ததுதான் தனக்கும் நடந்துவிடக்கூடாது என்ற காரணத்தினால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக" அவர் காரணம் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரனிடம், ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று அமித்ஷாவைச் சந்தித்தது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "நான் அமித்ஷாவைச் சந்திப்பதற்கான வாய்ப்பு உறுதியாக இல்லை. என்னை அழைக்கவும் மாட்டார்கள், நானும் சந்திக்க மாட்டேன்" என்று திட்டவட்டமாக மறுத்தார். மேலும், "அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை, தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணையாது" என்றும், "அதிமுகவை அமித்ஷா இயக்குகிறாரா என்று தெரியாது" என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் சாதி, மத அரசியலை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று கூறிய டிடிவி தினகரன், திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கத்துக்கு இடையூறு செய்யும் வகையில் அரசியல் கட்சிகள் செயல்படக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். தமிழ்நாட்டில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்கள் சகோதரர்களாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். மதத்தின் பெயராலோ, ஜாதியின் பெயராலோ, திருவிழாக்களின் பெயராலோ யாரும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட செங்கோட்டையன் தயார் - டிடிவி தினகரன் கடும் விமர்சனம்!
மதத்தின் பெயரால் அரசியல் செய்வதைத் தமிழ்நாட்டு மக்கள் உறுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ வேண்டும் என்பதே அமமுகவின் நிலைப்பாடு. தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்திற்கும், பொது அமைதிக்கும் இடையூறு ஏற்படுத்த எந்த இயக்கம் நினைத்தாலும் மக்கள் அதை ஏற்க மாட்டார்கள் என்றும் அவர் கடுமையாக எச்சரித்தார்.
இதையும் படிங்க: 2026 தேர்தலில் திமுக VS தவெக இடையே தான் போட்டியே..!! அடித்துச் சொல்லும் டிடிவி தினகரன்..!!