டாஸ்மாக்கில் ரூ.22 ஆயிரம் கோடி கொள்ளை...புள்ளி விவரத்தோடு திமுகவை பொளந்தெடுத்த இபிஎஸ்
எடப்பாடி பழனிச்சாமி பேசிக்கொண்டிருக்கும் பொழுதே கலைந்து சென்ற பொதுமக்கள்.
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்தில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பல்லடம் தொகுதிக்குட்பட்ட என்.ஜி.ஆர் சாலையில் பொதுமக்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார்.
“ஸ்டாலின் எல்லா கூட்டத்திலும் திமுக தான் ஆட்சிக்கு வரும் என்று பேசுகிறார். ஸ்டாலின் அவர்களே, பல்லடம் கூட்டத்தைப் பாருங்கள். அதிமுக கூட்டணி வெற்றிக்கு இம்மக்களே சாட்சி. திமுக எத்தனை கூட்டணி அமைத்தாலும் சரி, அதிமுக மக்களுடன் கூட்டணி அமைத்துள்ளோம். மக்கள் நினைத்தால் தான் ஆட்சிக்கு வரலாம். அதிமுக மக்களை நம்பி இருக்கிறது, திமுக கூட்டணியை நம்பியிருக்கிறது. தேர்தலில் திமுகவுக்கு சரியான தீர்ப்பை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை என்னிடத்தில் உள்ளது.
திமுக 52 மாத ஆட்சியில் ஊழல் புரிந்ததுதான் சாதனை. ஊழல் அரசை அகற்ற வேண்டும். 10 ரூபாய் என்றால் யார் ஞாபகம் வரும்? செந்தில் பாலாஜி. தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடை, டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். அமலாக்கத்துறை இதில் ஆயிரம் கோடி முறைகேடு நடைபெற்றதாக செய்தி வெளியிட்டது. முழுமையாக விசாரித்தால் 40 ஆயிரம் கோடி ஊழல் என்று செய்தி வருகிறது.
இதையும் படிங்க: நாங்கன்னா அவ்வளவு எழக்காரமா? - திமுக கூட்டணிக்குள் புகைச்சல்... விசிக எதிர்ப்பிற்கு அடிபணிந்த ஆளும் கட்சி...!
நாட்டில் நகை, பணம் திருடுவார்கள். இந்த ஆட்சியில் உடல் உறுப்பை திருடுகிறார்கள். . திமுக எம்.எல்.ஏ. மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடந்தது என்று திமுக அரசே கண்டுபிடித்துள்ளது. எனவே, திமுகவினர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்குப் போயிருந்தால் ஸ்கேன் செய்துகொள்ளுங்கள்.
வறுமை காரணமாக கிட்னி விற்கும் நிலை இந்த அரசில் வந்துள்ளது. நாமக்கல் பள்ளிப்பாளையத்தில் ஒரு பெண்ணுக்கு கிட்னிக்கு பதிலாக கல்லீரலை எடுத்துவிட்டனர். இந்தக்கொடுமை எந்த மாநிலத்திலும் இல்லை. வறுமையைப் பயன்படுத்தி சுரண்டல் நடக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை. எல்லா குற்றங்களுக்கும் போதை பொருள் விற்பனை தான் காரணம். நான் பலமுறை சொல்லியும் அரசு செவிசாய்க்கவில்லை. பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போதைக்கு அடிமையாகிறார்கள். நாங்கள் சொல்லும்போதே தடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. ஆனால், இப்போது முதல்வர் இளைஞர்களுக்கு அறிவுரை சொல்கிறார். இப்போது ஞானோதயம் வந்து என்ன பிரயோஜனம்..? போதை அடிமைகளை திருத்துவது சாதாரண காரியமல்ல. அரசு உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் பல குடும்பங்கள் சீரழிந்துள்ளன.
அதிமுக ஆட்சியில் தான் சிறந்த கல்வி கொடுத்தோம். ஒரேயாண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரியை சேர்த்து, அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து சிறப்பான சிகிச்சை அளித்தோம். இந்த மாவட்டத்தில் கூட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைத்தோம். அதுமட்டுமல்ல, 67 கலை அறிவியல் கல்லூரி, 21 பாலிடெக்னிக் கல்லூரி, 4 பொறியியல் கல்லூரி, 7 சட்டக்கல்லூரி, 4 வேளாண்மைக் கல்லூரி, 5 கால்நடை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிலையம் அமைத்தோம். உங்கள் மாவட்டத்தில் கூட ஒன்று திறந்தோம். இவ்வாறு பல கல்லூரிகளைத் திறந்து இந்தியாவிலேயே உயர்கல்வியில் முதன்மை மாநிலம் என்ற இலக்கை 2019ம் ஆண்டிலேயே அடைந்துவிட்டோம். 2011ம் ஆண்டு 100க்கு 32 பேர்தான் உயர்கல்வி படித்தனர், கல்வியில் புரட்சி மறுமலர்ச்சி ஏற்படுத்தியதால் 2019-20ல் 100க்கு 54 பேர் படித்தனர். தமிழகம் பல துறையில் உயர்ந்து நிற்க அதிமுக ஆட்சியே காரணம்.
நாங்கள் கூட்டணி வைத்ததும், அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என்கிறார் ஸ்டாலின். இதே திமுக 1999, 2001 ஆகிய தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது, மத்தியில் அமைச்சரவையில் அங்கம் வகித்தது, அப்போதெல்லாம் பாஜக மோசமான கட்சி என்று சொல்லவில்லை. அதிமுக கூட்டணி வைத்தவுடன் பாஜகவை மதவாதக் கட்சி என்கிறார். அவதூறு செய்திகள் வெளியிட்டு ஏமாற்றி வாக்குகளைப் பெற முயற்சிக்கிறார்.
அதிமுக யாருடன் கூட்டணியில் இருந்தாலும் கொள்கை அடிப்படையில்தான் செயல்படும். மதம், ஜாதிக்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக. உங்களைப் போல நிறம் மாறும் கட்சி இல்லை. உங்கள் உண்மை முகத்தை மக்கள் பார்த்துவிட்டார்கள். இனி ஏமாற்ற முடியாது. இனி தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும் நிலை எப்போதும் இல்லை, இந்த தேர்தலோடு திமுகவுக்கு முடிவுகட்டப்படும்.
இந்த ஆட்சியில் மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது? புதிய திட்டம் ஏதாவது இந்த மாவட்டத்துக்கு வந்திருக்கிறதா? நாங்க கொண்டுவந்த திட்டத்தை நிறுத்தியதுதான் விடியா திமுக அரசின் சாதனை. கோழி ஆராய்ச்சி பண்ணை 32 கோடியில் கட்டினோம் செயல்படுத்தவில்லை. நீண்டநாள் கோரிக்கையாக தடையில்லா குடிநீர் வழங்க கேட்டுள்ளீர்கள், அதிமுக ஆட்சியில் நிறைவேற்றித் தரப்படும்.
பொருளாதாரச் சூழலால் ஏழைப் பெண்களின் திருமணம் தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக திருமண உதவித் திட்டம் 25 ஆயிரம் ரூபாய், .50 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். தாலிக்குத் தங்கம் திட்டம் மூலம் ஒரு பவுன் தங்கம் கொடுத்தோம். இன்று 80 ஆயிரம் ரூபாய் ஒரு பவுன். அதிமுகவின் 10 ஆண்டுகளில் 12 லட்சம் பேருக்குக் கொடுத்தோம். இதனை திமுக அரசு நிறுத்திவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் இத்திட்டம் தொடரும். அதோடு மணப்பெண்ணுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டுவேட்டி கொடுக்கப்படும்.
கிராமங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கினோம். திமுக அரசு ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் காழ்ப்புணர்ச்சி பார்த்து, கிளினிக்கை மூடிவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் 4000 அம்மா மினி கிளினிக் திறக்கப்படும். பல்லடம் தொகுதியில் மட்டும் 9 கிளினிக் கொடுத்தோம்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஏழைகளுக்காக இந்த கட்சியை தொடங்கினார். எம்.ஜி.ஆர்., அம்மா என்று நம் தலைவர்களுக்கு மக்கள் தான் வாரிசு. திமுகவில் வாரிசு அரசியல். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி அடுத்து இன்பநிதியைக் கொண்டுவருகிறார்கள். அடிமை அமைச்சர்கள் கருணாநிதி குடும்பத்துக்கு சேவை செய்கிறார்கள்.
ஸ்டாலின் மகன் என்பது தவிர உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது? கட்சிக்கு உழைத்தவர்கள் ஓரத்தில் உள்ளனர், எந்த உழைப்பும் இல்லாமல் கருணாநிதி குடும்பத்தில் பிறந்தால்தான் பதவிக்கு வரமுடியும். டெல்லியிலும் கருணாநிதி குடும்பம் தான் கட்சியிலும் அதிகாரத்திலும் இருக்கும். அதிமுகவில் கிளைச் செயலாளர் கூட முதல்வர், பொதுச்செயலாளர் ஆக முடியும். இது ஜனநாயகக் கட்சி, விசுவாசமாக உள்ளவர்கள், உழைப்பவர்களுக்கு வீட்டு கதவை தட்டி பதவி கொடுக்கும் கட்சி அதிமுக. ஸ்டாலின் அவர்களே, திமுகவுக்கு உழைத்தவர்களுக்கு தலைவர் பதவி கொடுக்கப்படும் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.
ஏழை, எளிய, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விஞ்ஞான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மா எண்ணத்தில் உதித்தது அற்புதமான லேப்டாப் வழங்கும் திட்டம். திமுக அரசால் நிறுத்தப்பட்ட இத்திட்டம் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் அமல்படுத்தப்படும்.
தமிழகத்தில் கிராமப் புறங்களில் 3 லட்சத்து 80 ஆயிரம் பேர், கிட்டத்தட்ட 41% பேர் அரசுப் பள்ளியில் படிக்கிறார்கள். வெறும் 9 பேருக்குத்தான் மருத்துவக் கல்வி கிடைத்தது. அத்தகைய ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவராக வேண்டும் என்ற கனவை நனவாக்க, 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கினோம். அதன்மூலம் 2818 பேர் ஒரு ரூபாய் செலவில்லாமல் இலவசமாக மருத்துவம் படித்து இப்போது மருத்துவர் ஆகியிருக்கிறார்கள். இன்று காலை 9 மாணவர்கள் என்னிடம் ஆசி வாங்கிச் சென்றனர்.
கைத்தறி நெசவாளர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். அவர்களுக்கு அதிமுக ஆட்சியில் 200 யூனிட் மின்சாரமும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் மின்சாரமும் மானியம் கொடுத்தோம். பசுமை வீடுகள் கட்டிக்கொடுத்தோம். கைத்தறி ஆதரவு திட்டம், கைத்தறி துணிகள் தேக்கமடைந்தபோது 350 கோடி ரூபாய் மானியம் கொடுத்தோம். ஒருங்கிணைந்த ஜவுளி கொள்கை 2019ல் அறிவித்தோம், இரண்டாண்டுக்கு ஒருமுறை கோவை கொடீசியா அரங்கில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி ஏற்படுத்தி நெசவாளர்கள் சிறக்க நடவடிக்கை எடுத்தோம். கொரோனாவில் தனி நிதியுதவி செய்தோம்.
மின்கட்டணம் இந்த ஆட்சியில் 67% உயர்த்திவிட்டனர். ஆண்டுக்கு 5% உயர்வு. தொழிற்சாலை, கடைகளுக்கு பீக் ஹவர் கட்டணம் என்று தனியாக வசூலிக்கிறார்கள். குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100% முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக அரசுதான்.
ஏழை, விவசாயத் தொழிலாளி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மனை இருந்தால் அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். மனை இல்லாதவர்களுக்கு அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும்.
ஜூலை 7ம் தேதி மேட்டுப்பாளையத்தில் எழுச்சிப்பயணம் தொடங்கினேன், இன்று 150வது தொகுதியில் உங்களை சந்திக்கிறேன். 51 நாளில் 150வது தொகுதி. இங்கு அதிகளவு மக்கள் வெள்ளத்தைப் பார்க்கிறேன். அனைவருக்கும் என் நன்றி.
பல்லடம் தொகுதியில், 10 வார்டு பல்லடம் சேர்த்து நான்காவது குடிநீர் திட்டம் ஆயிரம் கோடியில் கொடுத்தோம், ஆரம்ப சுகாதார நிலையம், நொய்யலாற்றில் பாலம், கால்வாய் சீரமைக்கப்பட்டது. பல்லடம் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது என்கிறீர்கள், அதற்காக உயர்மட்டப் பாலம் அமைத்துக்கொடுக்கப்படும். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறவழிச்சாலை அமைக்க அதிமுக ஆட்சியில் 45 கோடி நிதிஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டோம், திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அதிமுக ஆட்சி வந்தபின்னர் புறவழிச்சாலை பணி தொடரும்.மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின்” என்று முடித்தார்.
கூட்டத்தில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம் ஆனந்தன்,உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்ற ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அங்கு கூடியிருந்த பொதுமக்கள் சாரை சாரையாக கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: மனதை உலுக்கும் கல்லூரி மாணவன் கொலை! திமுக நிர்வாகி பேரனுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்