மீண்டும் எடப்பாடியார் ஆட்சி..! நல்லதே நடக்கும்… தம்பிதுரை நம்பிக்கை..!
எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் ஆட்சி அமைப்பார் என தம்பிதுரை நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள் தமிழக அரசியலை முற்றிலும் புரட்டிப் போட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையிலான கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து சுமார் 108 இடங்களைப் பெற்றுள்ள நிலையில், ஆட்சி அமைக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் பெரும்பான்மை இல்லாத ஹங் அசெம்பிளி நிலை உருவாகியுள்ளது.
இந்தச் சூழலில் திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்ற வதந்திகள் கடந்த சில நாட்களாக தீவிரமாகப் பரவி வருகின்றன. இது தமிழக அரசியலின் வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத ஒரு பெரும் திருப்பமாகக் கருதப்படுகிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விஜய் ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கரைச் சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு வேண்டினார்.
ஆனால், போதுமான ஆதரவுக் கடிதங்கள் இல்லை என்று ஆளுநர் கூறியதாகத் தகவல்கள் வெளியாகின. காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு அளித்த நிலையில், இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் போன்றவை தங்கள் நிலையைத் தெளிவுபடுத்தாத சூழலில், அதிமுக தரப்பில் இருந்து திமுகவுடன் தொடர்பு கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகத் தொடங்கின.
இதையும் படிங்க: ஆளுநர் குறுக்கே நிற்பது சரியல்ல..! விஜய் பதவியேற்பு விஷயத்தில் தலையிட்ட ஜோதிமணி..!
அதனை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் அவரை சந்தித்து விட்டு அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் நல்லாட்சி அமையும் என்று அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். கடவுள் ஆசிர்வாதத்தில் நல்லதே நடக்கும் என்றும் கூறியுள்ளார். மக்களுக்கான நல்லாட்சியை எடப்பாடி பழனிச்சாமி தருவார் என்றும் ஆலோசனை நடந்து வருவதாகவும் தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தொடர்கிறதா என்ற கேள்விக்கு பதில் சொல்ல தம்பிதுரை மறுத்துவிட்டார்.
இதையும் படிங்க: தொகுதி மறு வரையறை..! கூட்டாட்சியை சிதைக்கும் முயற்சி..! மக்களவையில் கனிமொழி வாதம்..!