கழுத்தை நெறித்த கறவை மாட்டுக் கடன்... விவசாயி தூக்கிட்டு தற்கொலை...!
அரியலூர் அருகே தனியார் வங்கி ஊழியர்கள் நெருக்கடி: வீடியோ வெளியிட்டு, விவசாயி தூக்கிட்டு தற்கொலை
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள ஏலாக்குறிச்சி கிராமம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவசாயியான இவர் திருமானூர் கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இவரது மனைவி கமலா. இவர்களது மகன் ரோகித் விடுதியில் தங்கி கல்லூரிப் படிப்பையும், மகள் ரோசினி விடுதியில் தங்கி 11-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயி கோவிந்தராஜ் தனியார் வங்கி ஒன்றில் 3 லட்ச ரூபாய் அளவில் கறவை மாட்டுக்காகக் கடன் பெற்றுள்ளார். இதற்கான இந்த மாதத் தவணைத் தொகையான ரூ.11,958-ஐ குடும்பச் சூழல் காரணமாக அவரால் சரியான நேரத்தில் செலுத்த முடியவில்லை எனத் தெரிகிறது.
இதனால், வங்கியின் வசூல் ஏஜெண்டுகள் கோவிந்தராஜை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்து, தவணைப் பணத்தைக் கேட்டு கடுமையான நெருக்கடி அளித்துள்ளனர். இதையடுத்து, தவணைத் தொகையைச் செலுத்துவதற்காகப் பணம் புரட்டி வர அவரது மனைவி கமலா தனது தந்தை வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: இன்று தொடங்கவிருந்த வகுப்புகள்... தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை... !
வங்கி ஏஜெண்டுகளின் தொடர் அச்சுறுத்தலால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான விவசாயி கோவிந்தராஜ், நடந்த சம்பவங்களை விளக்கி தனது செல்போனில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
பின்னர், வீட்டின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தனியார் வங்கிகளின் வசூல் ஏஜெண்டுகள் அத்துமீறி நடந்துகொள்வதே இதுபோன்று கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளுகிறது.
எனவே, இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராத வகையில் தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: #BREAKING ஆணவக்கொலையா?... மயிலாடுதுறையில் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை... !