வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி... 3 கி.மீ. துரத்திச் சென்று மீட்ட மீனவர்கள்! துணிச்சலுக்கு குவியும் பாராட்டு!
சுமார் 3 கி.மீ. தூரம் வரை தொடர்ந்து சென்ற பிறகு, நீரோட்டத்தின் வேகம் குறைந்து பாதுகாப்பான பகுதி ஒன்று கிடைத்தது. அங்கு யானைக்குட்டியை மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.
மேற்கு வங்கம்: டீஸ்டா ஆற்றின் வேகமான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டியை, மீனவர்கள் தங்கள் படகில் சுமார் 3 கி.மீ. தூரம் பின்தொடர்ந்து சென்று பத்திரமாக மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மீட்பு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.
மேற்கு வங்க மாநிலம் மால்பஜார் பகுதியில் உள்ள டீஸ்டா ஆற்றில் மீனவர்கள் சிலர் வழக்கம்போல் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்றின் வேகமான வெள்ள நீரில் யானைக்குட்டி ஒன்று சிக்கி, நீரோட்டத்துடன் அடித்துச் செல்லப்படுவதை அவர்கள் கவனித்தனர்.
யானைக்குட்டி நீரில் தத்தளிப்பதை பார்த்த மீனவர்கள் உடனடியாக அதை மீட்க முயன்றனர். ஆனால் ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால், ஆரம்ப முயற்சியில் அவர்களால் குட்டி யானையை நெருங்க முடியவில்லை. இதையடுத்து, அவர்கள் தங்கள் படகை யானைக்குட்டி அடித்துச் செல்லப்பட்ட திசையில் திருப்பினர்.
இதையும் படிங்க: CM 2031! பதிவெண் கொண்ட டெஸ்லா காரில் திருமாவளவன் பயணம்! கோட் பட விஜய் பாணியில் சூசகம்?
ஆற்றின் வேகமான நீரோட்டத்தையும் பொருட்படுத்தாமல், யானைக்குட்டியை விடாமல் படகில் பின்தொடர்ந்தனர். சுமார் 3 கி.மீ. தூரம் வரை தொடர்ந்து சென்ற பிறகு, நீரோட்டத்தின் வேகம் குறைந்து பாதுகாப்பான பகுதி ஒன்று கிடைத்தது. அங்கு யானைக்குட்டியை மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.
பின்னர் குட்டி யானையை ஆற்றங்கரைக்கு கொண்டு வந்த அவர்கள், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள், யானைக்குட்டியை பரிசோதித்து அதன் தாயுடன் மீண்டும் சேர்த்து வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குட்டி யானையை மீட்பதற்காக, ஆபத்தான நீரோட்டத்திலும் விடாமல் பின்தொடர்ந்த மீனவர்களின் செயல் தற்போது சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்று வருகிறது. மீட்பு காட்சிகள் அடங்கிய வீடியோவும் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பயங்கரம்.. பட்டா கத்தியுடன் இளைஞர்களை விரட்டி வெட்டிய திமுக கவுன்சிலர் கணவர்!