சென்னையின் முக்கிய இடங்களில் இனி இலவச Internet..! எங்கெங்கே தெரியுமா..?
மெரினா உள்ளிட்ட 44 இடங்களில் WIFI வசதி ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
சென்னை மாநகரில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் முக்கிய இடங்களில் இலவச வைஃபை வசதி மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை மற்றும் தலைமைச் செயலகப் பூங்கா உள்ளிட்ட 44 இடங்களில் இந்த வசதி தற்போது கிடைக்கிறது. முதலமைச்சரின் உத்தரவின்படி பெருநகர சென்னை மாநகராட்சி இந்தப் பணியை விரைவுபடுத்தியது. இதற்கு முன்பு செயல்படாமல் இருந்த இந்த இணைய வசதிகள் சீரமைக்கப்பட்டு மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலையிலிருந்து கலங்கரை விளக்கம் வரை 27 இடங்களிலும், பெசன்ட் நகர் கடற்கரையில் ஐந்து இடங்களிலும், தலைமைச் செயலகப் பூங்காவில் 12 இடங்களிலும் இந்த இலவச வைஃபை இணைப்பு கிடைக்கிறது. திருவான்மியூர் கடற்கரை உள்ளிட்ட பிற முக்கிய இடங்களிலும் இதேபோன்ற வசதிகளை விரிவுபடுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்கள் போன்ற மக்கள் நெரிசலான பகுதிகளில் மேலும் பல இடங்களில் இலவச இணைய வசதியை உருவாக்கவும் ஏற்கனவே செயல்படாத இணைப்புகளை சீரமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த இலவச வைஃபை சேவையைப் பயன்படுத்த விரும்புவோர் தங்கள் செல்போனில் வைஃபை வசதியை ஆன் செய்து கிடைக்கும் நெட்வொர்க்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது திரையில் தோன்றும் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து அந்த மொபைல் எண்ணுக்கு ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (ஓடிபி) செய்தியாக வரும். அந்த ஓடிபியை உள்ளிட்டவுடன் இணைய இணைப்பு கிடைத்துவிடும். இது முழுக்க முழுக்க இலவசமான சேவை.
இதையும் படிங்க: மத்திய அரசுக்கு எச்சரிக்கை மணி... நீட், FCRA திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தமிழக அரசு இன்று தீர்மானம்...!
சென்னை போன்ற பெருநகரில் கடற்கரைக்கு வரும் மக்கள், பூங்காவில் ஓய்வெடுப்பவர்கள் மற்றும் பொது இடங்களில் நேரம் செலவிடுபவர்கள் தங்களது இணையத் தேவைகளை எளிதாக நிறைவேற்றிக் கொள்ள இந்த வசதி உதவும். அழைப்புகள் செய்வது, செய்திகள் அனுப்புவது, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்வது, டாக்சி முன்பதிவு செய்வது போன்ற அன்றாடப் பயன்பாடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். முன்னதாக இதேபோன்ற வசதிகள் இருந்தபோதும் பல இடங்களில் இணைப்பு சரியாக இல்லாததால் மக்கள் சிரமப்பட்டனர். அந்தக் குறைபாடுகளை நீக்கி மீண்டும் சேவையைச் செயல்படுத்தியுள்ளது மாநகராட்சி.
இதையும் படிங்க: பாலைவனமாகும் டெல்டா...மேட்டூர் அணைக்கு தண்ணீர் வருமா?... இன்று அவசரமாக கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம்...!