×
 
☰

இந்தியில் பெயர்ப்பலகை... 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்... கொதித்துப்போன எதிர்க்கட்சிகள்... அதிரடி காட்டிய தமிழக அரசு..!!

சாத்தான்குளம் மாநில நெடுஞ்சாலை துறை பலகையில் ஹிந்தியில் எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்த விவகாரத்தில் இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் நிறுவப்பட்ட வழிகாட்டிப் பலகை பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சாத்தான்குளத்திலிருந்து நாசரேத் செல்லும் பிரதான சாலையில், கருமேனி ஆற்றுப்பாலம் அருகேயும் திருச்செந்தூர் சாலை விலக்கு அருகேயும் SH-93 என்ற தலைப்பில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வழிகாட்டிப் பலகை அமைக்கப்பட்டது.

இந்தப் பலகையில் திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட ஊர்களின் பெயர்கள் தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பொறிக்கப்பட்டிருந்தன. குறிப்பாகத் தமிழுக்கு அடுத்தபடியாக இந்தியில் பெரிய எழுத்துகளில் பெயர்கள் இடம்பெற்றிருந்ததால் பொதுமக்களிடையே அதிர்ச்சியும் எதிர்ப்பும் எழுந்தன.வழக்கமாக மாநில நெடுஞ்சாலைத் துறை நிறுவும் வழிகாட்டிப் பலகைகளில் தமிழும் ஆங்கிலமும் மட்டுமே இடம்பெறும். சில இடங்களில் இந்தி கடைசியாகச் சிறிய அளவில் இருந்தாலும், இங்கு ஆங்கிலத்தைப் பின்னுக்குத் தள்ளி இந்திக்கு இரண்டாம் இடம் அளிக்கப்பட்டிருந்தது.

இது தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கு முரணாக இருப்பதாகக் கருதப்பட்டது. சமீபத்தில் தமிழக அரசு வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயர்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில், அரசுத் துறையே இந்தியை முன்னிறுத்தியது போன்ற தோற்றமளித்ததால் சர்ச்சை மேலும் தீவிரமடைந்தது.பலகை நிறுவப்பட்ட செய்தி சமூக வலைதளங்களில் விரைவாகப் பரவியது. உள்ளூர் மக்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் இதைத் தமிழ் மொழிக்கு எதிரான நடவடிக்கையாகக் கண்டித்தனர். தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமப் பகுதியில் கூட இந்தி திணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையும் படிங்க: பாதாள சாக்கடை திட்டத்தில் இனி தனியார் பங்களிப்பு..! தமிழக அரசு டெண்டருக்கு அழைப்பு..!!

இது இருமொழிக் கொள்கையில் விளையாடக்கூடாது என்ற எச்சரிக்கைகளையும் தூண்டியது. கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து பலகையில் இருந்த இந்தி எழுத்துகள் அகற்றப்பட்டன.இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொறுப்பான இரண்டு அதிகாரிகள் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். நெடுஞ்சாலைத் துறையின் செயல்பாட்டில் ஏற்பட்ட குறைபாட்டைச் சுட்டிக்காட்டி விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது போன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டின் மொழி உணர்வு மற்றும் கலாச்சார அடையாளம் தொடர்பான விவாதங்களை மீண்டும் முன்னுக்குக் கொண்டுவந்துள்ளன. அரசுத் துறைகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தை மட்டும் பின்பற்றி வழிகாட்டிப் பலகைகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. இந்தச் சம்பவம் மொழி உரிமைகள் குறித்த விழிப்புணர்வை மேலும் அதிகரித்துள்ளது

நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் இரு மொழிக் கொள்கைக்கு எதிராக செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: அமைச்சரவை மாற்றம்..! புது முகங்களுக்கு வாய்ப்பு.? எகிறும் எதிர்ப்பார்ப்பு.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share