பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு.. அழிச்சாட்டிய ஆட்சி.. நயினார் ஆவேசம்..!
காரியாங்குடி ஊராட்சி தொடக்கப்பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டதற்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் அருகே காரியாங்குடி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் காலை உணவு திட்டத்தின் கீழ் சமையல் பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று காலை உணவை சமைப்பதற்காக, சமையல் ஊழியர்கள் அங்கு சென்றபோது, சமையலறையில் இருந்த பொருட்கள் உடைத்து நொறுக்கப்பட்டும், மளிகை பொருட்கள் சிதறி கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் மாணவர்கள் குடிநீர் அருந்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி உடைக்கப்பட்டு இருந்ததோடு, அந்த தொட்டிக்குள் மனித கழிவு கொட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பள்ளி வளாகத்தில் இருந்த வாழை மரங்கள் சேதப்படுத்தப்பட்டு, தென்னை மரங்களில் இருந்த தேங்காய்கள் பறிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டதாக கூறி மூன்று பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அடுத்த வேங்கைவயல் சம்பவம்.. திருவாரூரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..! கொந்தளிப்பில் மக்கள்..!
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கல்வி கொடுக்கும் பள்ளி என்றும் பாராமல் இத்தகைய செயலை செய்த குற்றவாளிகளின் மனதில் மனிதத்தன்மையோ, காவல்துறை மீது பயமோ இல்லாததையே காட்டுகிறது.
பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி முதல், பச்சிளம் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் குடிநீர் தொட்டி வரை சமூக விரோதிகளால் மலம் கலக்கப்படும் அவலம் தொடர்ந்து வருகிறது. இது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எப்போது வாய் திறப்பார் என்று கேள்வி எழுப்பியுள்ள நயினார் நாகேந்திரன், சட்டம் ஒழுங்கைச் சீரழித்து சமூக விரோதிகளின் அழிச்சாட்டியத்தை நிலைநாட்டுவது தான் திராவிட மாடல் ஆட்சியா? என்றும் கடுமையாக சாடினார்.
மேலும் தொடக்கப்பள்ளி சிறுவர் சிறுமியரின் உயிரின் மீதும், சமூக நீதியின் மீதும் சிறிதும் அக்கறை இருந்தால், உடனடியாக தீவிர விசாரணை நடத்தி குற்ற சம்பவத்தில் ஈடுப்பட்ட சமூக விரோதிகளைக் கைது செய்ய வேண்டும் என ஆளும் திமுக அரசை வலியுறுத்தியுள்ளார் நயினார் நாகேந்திரன்.
இதையும் படிங்க: அடுத்த வேங்கைவயல் சம்பவம்.. திருவாரூரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..! கொந்தளிப்பில் மக்கள்..!