×
 
☰

SIR விவகாரம்! அக்டோபர் 15-ல் சென்னையில் இந்தியா கூட்டணி மெகா போராட்டம்! முதல்வர் விஜய்க்கும் அழைப்பு?!

இந்தப் போராட்டத்தில் தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் பங்கேற்க வேண்டும் என்று அவருக்கு அழைப்பு விடுக்கவும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான விவகாரம் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் போராட்டம் நடத்த இந்தியா கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். SIR நடவடிக்கைகள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வரும் நிலையில், தமிழகத்திலும் ஒருங்கிணைந்த போராட்டத்தை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில், இந்தியா கூட்டணியில் இடம்பெறாத தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பிலும் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் மரிய வில்சன் கலந்து கொண்டனர். இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் தவெக பிரதிநிதிகள் பங்கேற்பது இதுவே முதல் முறை என செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்தக் கூட்டம் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: வெடிக்கும் SIR விவகாரம்..! தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டு போராட்டம்... இந்தியா கூட்டணி முடிவு..!!

ஆலோசனையின் முடிவில், ஞானேஷ் குமாருக்கு எதிராக அக்டோபர் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் போராட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அக்டோபர் 15-ம் தேதி சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

மேலும், இந்தப் போராட்டத்தில் தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் பங்கேற்க வேண்டும் என்று அவருக்கு அழைப்பு விடுக்கவும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் SIR விவகாரம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் போராட்டக் களம் தமிழகத்தில் மேலும் விரிவடையும் சூழல் உருவாகியுள்ளது.

போராட்டங்களை ஒருங்கிணைப்பதற்காக ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் தலா இரண்டு பிரதிநிதிகளை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, இந்தியா கூட்டணி சார்பில் நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டங்கள் அரசியல் ரீதியாக எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

இதையும் படிங்க: SIR சர்ச்சையில் புதிய திருப்பம்! ஞானேஷ் குமாருக்கு எதிரான வழக்கு! அடுத்த வாரமே விசாரணை! உச்ச நீதிமன்றம் அதிரடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share