பொதுவாழ்வில் 25 ஆண்டுகள்..! பிரதமர் நரேந்திர மோடிக்கு கமல்ஹாசன் வாழ்த்து!
பொதுவாழ்வில் 25 ஆண்டுகள் நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மற்றும் பிரதமர் என மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுப் பதவிகளில் 25 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2001-ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று குஜராத் மாநில முதலமைச்சராக முதன்முதலில் பதவியேற்ற நரேந்திர மோடி, தொடர்ந்து 13 ஆண்டுகள் குஜராத் முதல்வராகவும், கடந்த 2014 முதல் தற்போது வரை இந்தியாவின் பிரதமராகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுப் பொறுப்புகளில் இடைவிடாது 25 ஆண்டுகளை இன்று நிறைவு செய்துள்ளார்.
இதனையொட்டி, கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அரசுப் பதவிகளில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுப் பதவியில் 25 ஆண்டுகள் தொடர்ந்து நீடிப்பது என்பது, எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் உங்கள் மீது வைத்துள்ள மாறாத அன்பையும் நம்பிக்கையையும் பறைசாற்றும் அசைக்க முடியாத சான்றாகும் என்று பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க: சாலமன் பாப்பையா புகழ் என்றும் நிலைத்திருக்கும்! மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!
மேலும், தனது தனிப்பட்ட பொது வாழ்க்கையையும் இதில் நினைவுகூர்ந்த அவர், பொதுவாழ்க்கையில் எனது 70 ஆண்டுகால திரைப் பயணமும் சமூகப் பயணமும் கூட மக்களின் அளப்பரிய அன்பினாலும் நம்பிக்கையினாலும் மட்டுமே தொடர்ந்து நிலைத்து நிற்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற பிறகு பிரதமரைச் சந்தித்த நிகழ்வை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்ட கமல்ஹாசன், கடந்த ஆண்டு நான் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்ற பிறகு அவரைச் சந்தித்தபோது, முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினரான எனக்குத் தனது பொன்னான நேரத்தை மனமுவந்து ஒதுக்கித் தந்தார்.
எங்களது அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் கொள்கை வேறுபாடுகளைக் கடந்து, இந்தியா மீதான எங்களது நம்பிக்கைகள், கனவுகள் மற்றும் அடுத்த தலைமுறையினருக்காக ஒரு வலிமையான தேசத்தைக் கட்டமைக்கும் நமது கூட்டுப் பொறுப்பு குறித்து நாங்கள் விரிவாக உரையாடினோம் என்று தெரிவித்துள்ளார்.
அரசியல் எல்லைகளைக் கடந்து பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால ஆட்சிப் பொறுப்புச் சாதனையைப் பாராட்டி கமல்ஹாசன் விடுத்துள்ள இந்த வாழ்த்துச் செய்தி தேசிய மற்றும் தமிழக அரசியல் அரங்கில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: மூத்த பத்திரிகையாளர் பாயல் மேத்தா மறைவு... பிரதமர் நரேந்திர மோடி உருக்கமான இரங்கல்!